கோவை: கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலையொட்டி ஆயத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிகள் அமலாக்கப்படுகிறது. குறுகிய காலமே இருப்பதால், தேர்தல் பிரிவினர் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டும். அரசியல் கட்சிகள் மக்களை கவர என்ன செலவு செய்கிறார்கள்? பிரசார கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு என்ன உணவு வாங்கி தருகிறார்கள்? என கணக்கு போட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனு தாக்கல் செய்ததும் அந்த வேட்பாளரின் ‘செலவு விவர’ பட்டியல் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் இன்றி அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பாக செய்த செலவுகளை ‘கட்சி பெயரில்’ எழுதி வைக்க வேண்டும். யார் செலவு செய்தார்கள் என விசாரித்து தகவல்களை பதிவு செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்ததும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் மாவட்ட அளவில் நகர், புறநகரில் ‘உணவு பட்டியல்’ விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
பல்வேறு கடைகளில் விலை பட்டியல் வாங்கி ஒப்பீடு செய்யும் பணி நடத்தப்படுவதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். டீ, காபி, வடை, இட்லி, தோசை, பூரி, புரோட்டா, சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, வெஜ் பிரியாணி, சாப்பாடு, தக்காளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றிக்கு விலை நிர்ணயிக்க 150க்கும் மேற்பட்ட ஓட்டல்களின் விலை பட்டியல் வாங்கி அதை ‘சராசரி’ முறையில் கணக்கிட்டு விலையை தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி தீர்மானிக்க தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.
பிரசாரத்திற்கு ஓட்டு கேட்டு வருபவர்கள் கட்டாயம் பிரியாணி எதிர்பார்க்கும் நிலையிருக்கிறது. தேர்தல் பிரிவு அதிக விலை நிர்ணயம் செய்தால் செலவு கணக்கில் பிரியாணி செலவு எக்கச்சக்கமாக எகிறி விடும் என கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். தேர்தல் பிரிவினர் கூறுகையில், ‘‘குடிநீர் முதல் அனைத்து உணவுகளுக்கும் கணக்கு காட்ட வேண்டும். தேர்தல் தேதி அறிவித்தால்தான் இந்த கணக்கு நடைமுறைக்கு வரும். இப்போதைக்கு உத்தேச பட்டியல் இருக்கிறது. உணவு விலை விவரங்கள் கடை, ஏரியாவிற்கு ஏற்ப மாறுபடுகிறது. எந்த கடையில் என்ன வாங்கினார்கள், அதன் விலை என்ன கடைகளில் இருந்து வீடியோ பதிவு செய்து விடுவோம்’’ என்றனர்.
The post குடிநீர் முதல் அனைத்திற்கும் கணக்குதான்; மட்டன், முட்டை பிரியாணி எவ்வளவு?: தேர்தல் பிரிவினர் விசாரணை தீவிரம் appeared first on Dinakaran.