×

சிறப்பு தொழுகையுடன் ரம்ஜான் நோன்பு துவக்கம்

ராமநாதபுரம், மார்ச் 13: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி ரம்ஜான் மாத நோன்பினை இஸ்லாமியர்கள் தொடங்கினர். இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் ரம்ஜான் மாத நோன்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.

இந்த ரம்ஜான் மாதத்தில் முதல் பிறை பார்த்த பின்னர் நோன்பு உறுதி செய்யப்படும். அதன்படி ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பிறை தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தராவீஹ் எனப்படும் சிறப்பு தொழுகை நடந்தது. நேற்று அதிகாலை முதல் நோன்பு நோற்கும்படி இஸ்லாமிய மக்களுக்கும், பேஷ் இமாம்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ராமநாதபுரம், கீழக்கரை, பெரியபட்டிணம், தொண்டி, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி,அபிராமம், சாயல்குடி,ஒப்பிலான் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று அதிகாலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பு தொழுகை செய்து நோன்பை தொடங்கினர்.

இதேபோல் பெண்கள் பள்ளிவாசல்களிலும் தொழுகை செய்து நோன்பை தொடங்கினர். மேலும் அந்தந்த பகுதி பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான பச்சரிசியினை தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் அந்தந்த தாலுகா வட்ட வழங்கல் அலுவலக பிரிவில் இருந்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கிகள் மூலம் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டது.

The post சிறப்பு தொழுகையுடன் ரம்ஜான் நோன்பு துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ramadan ,Ramanathapuram ,Muslims ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 12 ஆயிரம் ஆடுகள் விற்பனை