ஊட்டி, மார்ச் 13: நாடு முழுவதும் ரூ.45.769 கோடி செலவில் ரயில்வே துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை, மேம்படுத்தபட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனையகங்கள் உள்ளிட்ட சுமார் 6000 ரயில்வே துறை திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதன் ஓரு பகுதியாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட 30 ரயில் நிலையங்களில் இந்த ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனையகங்கள் நேற்று திறக்கப்பட்டது. இந்த விற்பனையகங்களில் அந்தந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுபொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படவுள்ளது. உள்ளூர் தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க செய்யவும், ரயில் பயணிகள் அசல் உள்ளூர் தயாரிப்புகளை பெற்று பயன்பெறும் நோக்கில் இந்த விற்பனையகங்கள் துவக்கப்பட்டுள்ளன.
குன்னூர், ஊட்டி மற்றும் ஹில்குரூவ் நிலையங்களில், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு விற்பனையகங்கள் திறக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் தயாரிப்புகளான தேயிலை தூள், ஹோம்மேட் சாக்லெட், ஊட்டி வர்க்கி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யபடவுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே, 1000க்கும் மேற்பட்ட ஒரு நிலையம் ஒரு விற்பனையகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையகங்களை கூடுதலாக திறக்கபட்டிருப்பது குறிப்பிடதக்கது.
The post நீலகிரி மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்களில் விற்பனையகம் திறப்பு appeared first on Dinakaran.