புவனகிரி, மார்ச் 13: இலங்கை கைதடி பகுதியில் உள்ள நாவற்ழி பகுதியைச் சேர்ந்தவர் தரணிதரன் (52). இவர் கடந்த 2001ம் ஆண்டு படகு மூலம் ராமேஸ்வரம் வந்து, அங்கிருந்து புவனகிரி அடுத்த கீரப்பாளையத்தில் வசித்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். பின்னர் கீரப்பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை முறைப்படி பதிவும் செய்துள்ளார். இந்நிலையில் கீரப்பாளையம் முகவரியை கொடுத்து குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வாங்கியதாக தெரிகிறது. மேலும் தமிழ்நாட்டில் வசிப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து அனுமதியும் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அரசு அனுமதி பெற்று இலங்கைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் இவரது விசா காலம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் இவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் விசா காலம் முடிந்தும் இலங்கை செல்லாமல் இருப்பதாக கீரப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி தர்மா என்பவர் தரணிதரன்(52) மீது புவனகிரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் 4பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விசா முடிந்து புதுவையில் தங்கிய இலங்கை தமிழர் மீது வழக்கு appeared first on Dinakaran.