×

புழுதி பறக்க ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த 140 காளைகள் சுட்டெரிக்கும் வெயிலிலும் திரண்ட இளைஞர்கள் ஒடுகத்தூர் அருகே மாடு விடும் விழா

ஒடுகத்தூர், மார்ச் 13: ஒடுகத்தூர் அருேக நடந்த மாடு விடும் விழாவில் 140 காளைகள் ஆக்ரோஷமாக இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா மற்றும் மயானக் கொள்ளை முன்னிட்டு நேற்று 56ம் ஆண்டு மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதற்காக, இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகள் ஓடும் ஓடுதளம் சீரமைத்து இருந்தனர். காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த மாடு விடும் விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 140க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதேபோல், பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர், காளை பரிசோதிக்க கால்நடை மருத்துவ குழுவினர், மீட்பு பணிக்காக தீயணைப்பு துறை, வருவாய்த்துறையினர் அங்கு முகாமிட்டிருந்தனர். மேலும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் திரண்டிருந்தனர்.

தொடர்ந்து, ஒன்றிய கவுன்சிலர் குமார், தர்மகர்த்தா பரசுராமன், மேட்டுக்குடி சக்கரவர்த்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்னலட்சுமி ராமு ஆகியோர் முன்னிலையில், ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதும் அவை இளைஞர்கள் மத்தியில் புழுதி பறக்க ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது, வீதியில் இருந்த இளைஞர்கள் காளைகளை தட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் செய்தனர். இதனால், மாடு விடும் திருவிழா களை கட்டியது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலிலும் இளைஞர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. மேலும், காளைகள் முட்டியதில் ஓடுதளத்தில் நின்றிருந்த 7க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசாக ₹75 ஆயிரம், 2வது பரிசு ₹65 ஆயிரம், 3வது பரிசு ₹55 ஆயிரம் என மொத்தம் 75 பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டு காளையின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

The post புழுதி பறக்க ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த 140 காளைகள் சுட்டெரிக்கும் வெயிலிலும் திரண்ட இளைஞர்கள் ஒடுகத்தூர் அருகே மாடு விடும் விழா appeared first on Dinakaran.

Tags : Odugathur ,bulls ,Angala Parameshwari Amman temple festival ,Varadalampattu ,Cow slaughtering ceremony ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...