×

₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட 2 பேர் கைது விஜிலென்ஸ் போலீசார் அதிரடி செய்யாறில் பட்டா மாற்றம் செய்ய

செய்யாறு, மார்ச் 13: செய்யாறில் பட்டா பெயர் மாற்றம் செய்ய முதியவரிடம் ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் திருவத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(70), நெசவுத்தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தற்போது வெங்கடேசன் மொத்த விலையில் ஊதுபத்திகளை வாங்கி கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது பெயரில் உள்ள வீட்டுமனை பட்டாவை தனது மகனுக்கு தான செட்டில்மெண்டாக எழுதி வைக்க செய்யாறு சார்-பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தார். அப்போது, அதில் சிக்கல் இருப்பது தெரியவந்தது.

எனவே, கடந்த 20.12.2023 அன்று திருவத்திபுரம் நகராட்சி மூலம் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பட்டா மாற்றம் குறித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர், அதன் மீது நடவடிக்கை குறித்து செய்யாறு நகராட்சி வளாகத்தில் உள்ள டவுன் சர்வேயர் அலுவலகத்திற்கு பலமுறை சென்று கேட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சர்வேயர் கன்னிவேல் என்பவரிடம் பட்டா மாற்றம் சம்பந்தமாக பேசும்போது ₹40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றாராம். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், எனக்கு 70 வயது ஆகிறது. என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளேன் என கூறியுள்ளார். ஆனால், சர்வேயர், கண்டிப்பாக ₹25 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்ய முடியும் என கூறிவிட்டாராம். இதுகுறித்து முதியவர் வெங்கடேசன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.

இதையடுத்து, சர்வேயரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ₹20 ஆயிரம் நோட்டுக்களை புகார்தாரர் வெங்கடேசனிடம் வழங்கி, சர்வேயரிடம் கொடுக்கும்படி கூறினர். தொடர்ந்து, நேற்று மதியம் 12.30 மணி அளவில் நகராட்சி வளாகத்தில் உள்ள சர்வேயர் அலுவலகத்திற்கு சென்ற வெங்கடேசன் அந்த பணத்தை சர்வேயர் கன்னிவேலிடம் கொடுத்தார். ஆனால், அவர் பணத்தை பெறாமல் அங்கிருந்த கணினி உதவியாளர் மாதவன் என்பவரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். எனவே, வெங்கடேசன் அந்த பணத்தை கணினி உதவியாளரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வேல்முருகன், கோபிநாத் மற்றும் 7 பேர் கொண்ட குழுவினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பட்டா மாற்றத்திற்காக ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கன்னிவேல்(50), அதற்கு உடந்தையாக இருந்த தற்காலிகமாக பணியாற்றும் கணினி உதவியாளர் மாதவன்(23) ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்டு வந்த சுரேஷ் என்பவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய சர்வேயர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ₹20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் உட்பட 2 பேர் கைது விஜிலென்ஸ் போலீசார் அதிரடி செய்யாறில் பட்டா மாற்றம் செய்ய appeared first on Dinakaran.

Tags : Vigilance police ,Seyyar ,Thiruvannamalai District ,Seiyaru Town ,Tiruvattur riverside street ,Seiyaru ,
× RELATED உலக மலேரியா தின விழிப்புணர்வு...