×

சூச்சணி தரைப்பாலத்தில் புதிய மேம்பாலம் அமைப்பு: ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கீடு

 

திருவாடானை, மார்ச் 12: திருவாடானையில் இருந்து சூச்சணி வழியாக தோட்டாமங்கலம் செல்லும் பிரதான சாலையின் குறுக்கே மணிமுத்தாறு உபரிநீர் செல்லும் வழித்தடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டு பெய்த தொடர் மழையினால் சாலையின் குறுக்கே மணிமுத்தாறு உபரிநீர் செல்லும் வழித்தடத்தில் சூச்சணி தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

இதனால் கல்லூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பருவமழை காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூழ்கிய இந்த தரைப்பாலத்தை பாதசாரிகள் கடந்து செல்லும் வகையில் கயிறு கட்டி விட்டனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று படத்துடன் செய்தி வெளியானது.

இந்த நிலையில் சூச்சணி தரைப் பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்தது. அதனடிப்படையில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கு முதற்கட்ட பணிகளை துவங்கும் வகையில், அந்த இடத்தில் போக்குவரத்து வசதிக்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

The post சூச்சணி தரைப்பாலத்தில் புதிய மேம்பாலம் அமைப்பு: ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Thottamangalam ,Soochani ,Shuchani ,flyover ,Dinakaran ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்