×

3வது முறையாக நூரோலை பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்

 

ரிஷிவந்தியம், மார்ச் 11: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நூரோலை கிராம எல்லையில் நூரோலை பெரியாயி அம்மன் கோயில்-கீழ்பாடி சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த அரசு மதுபான கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், 2 முறை போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இந்த அரசு மதுபான கடையை அகற்ற கோரி அங்குள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் கடையின் முன்பாக திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கர், நூரோலை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தொகுதி எம்எல்ஏ, தொலைபேசி மூலம் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு கடையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post 3வது முறையாக நூரோலை பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nurolai ,Rishivantiyam ,Nurolai Periyai Amman Koil-Keelpadi Road ,Rishivantiyam Assembly Constituency ,Kallakurichi District ,Dinakaran ,
× RELATED ரிஷிவந்தியம் அருகே சாலையில் தூங்கிய பெண் மீது மினி லாரி ஏறி பலி