×

புதுவையில் வெங்காய வியாபாரி உட்பட 3 பேரிடம் ஆன்லைனில் ரூ.9.15 லட்சம் மோசடி

 

புதுச்சேரி, மார்ச் 11: புதுச்சேரியில் வெங்காய வியாபாரி உட்பட 3 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.9.15 லட்சத்தை இழந்துள்ளனர்.  புதுச்சேரியை சேர்ந்த வெங்காய வியாபாரியான புவனேஸ்வரி என்பவர் வெங்காயம் வாங்குவது தொடர்பாக யூடியூப்பில் ஒரு விளம்பரத்தை பார்த்துவிட்டு தெரியாத நபரிடம் பேசியுள்ளார். தொடர்ந்து, வெங்காயம் லோடு அனுப்ப ரூ.6.65 லட்சத்தை தெரியாத நபரின் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு, அந்த நபர் வெங்காயத்தை அனுப்பி வைக்காமல் ஏமாற்றியுள்ளார்.

சூசைராஜா ராகவன் என்பவர், தெரியாத ஒருவர் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஆன்லைனில் ரூ.1.60 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர், அவர் சம்பாதித்த பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் பணம் செலுத்துமாறு மோசடி கும்பல் கூறியிருக்கிறது. அதன் பிறகே, அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது. புதுச்சேரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் தெரியாத நபர் அறிமுகமாகி மல்டி லெவல் மார்க்கெட்டிங் குழுமத்தில் முதலீடு செய்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

இதை நம்பி சதீஷ்குமாரும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து ரூ.90 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதன் மூலம் மூன்று பேரிடமிருந்து ரூ.9.15 லட்சத்தை மோசடி கும்பல் பறித்துள்ளது. மேலும், வினோத்குமார், மகேஸ்வரன் ஆகியோரது பேஸ்புக் கணக்கு மற்றும் ஆனந்த் என்பவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து, அதில் ஆபாச படங்கள் மற்றும் செய்திகளை பதிவிட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுவையில் வெங்காய வியாபாரி உட்பட 3 பேரிடம் ஆன்லைனில் ரூ.9.15 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Puducherry ,Bhuvaneshwari ,YouTube ,
× RELATED அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட்,...