×

சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போனுடன் வந்த ரஷ்ய, ஐதராபாத் பயணிகள்: போலீசார் விசாரணை

 

மீனம்பாக்கம், மார்ச் 11: சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போனுடன் வந்த ரஷ்ய மற்றும் ஐதராபாத் பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து சேலம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிக்க வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடமைகளை மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் பரிசோதித்து அனுப்பினர்.

அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுமார் 40 வயதுடைய ஒருவரும், ஐதராபாத்தை சேர்ந்த சுமார் 30 வயதுடைய ஒருவரும் விமானத்தில் சேலம் செல்வதற்காக வந்திருந்தனர். அவர்கள் இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதித்தபோது, அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் சேட்டிலைட்போன் என்பது தெரியவந்தது. இந்த சேட்டிலைட்போன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக, நமது நாட்டில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.

இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது இது சேட்டிலைட்போன் அல்ல, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய விலை உயர்ந்த வெளிநாட்டு செல்போன்கள் என்று வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரின் பயணங்களையும் ரத்து செய்து, அவர்கள் வைத்திருந்த போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த பிரச்னை காரணமாக விமானம் அரை மணி நேரம் தாமதமாக சேலம் புறப்பட்டு சென்றது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார், தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் சேட்டிலைட் போனுடன் வந்த ரஷ்ய, ஐதராபாத் பயணிகள்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Chennai airport ,Meenambakkam ,Indigo Airlines ,Chennai ,Salem ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்