×

சிறுமி கொலையை கண்டித்து தொடர் போராட்டம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டசபை சாலைகள் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருவதால் ஆளுநர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலத்திட்ட கோப்புகளுக்கு அப்போதைய ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராமல் மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.

இதை கண்டித்து 2018ல் அப்போதைய முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து, கவர்னர் மாளிகை அமைந்துள்ள சாலைகள் பேரிகார்டு போட்டு முழுமையாக மூடப்பட்டது. 2021ல் புதிய கவர்னராக தமிழிசை பதவியேற்றபோது, கவர்னர் மாளிகை பின்புறம் இருந்த பேரிகார்டுகள் மட்டும் அகற்றப்பட்டது. முன்பகுதியில் போடப்பட்ட பேரிகார்டுகள் அகற்றப்படாமல் இருந்தது.

பின்னர் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆளுநர் மாளிகை முன்பு போடப்பட்ட பேரிகார்டுகள் அகற்றப்பட்டது.  இதனால் பொதுமக்கள் சிரமின்றி கவர்னர் மாளிகை வழியாக கடற்கரை மற்றும் பாரதி பூங்காவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் புதுவை முத்தியால்பேட்டை சோலை நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்தியா கூட்டணி, அதிமுக மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் பந்த் நடத்தப்பட்டது.

அப்போது, கவர்னர் மாளிகையை இந்தியா கூட்டணி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, பல்வேறு அமைப்புகளும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, ஆளுநர் மாளிகை, சட்டசபை, தலைமை செயலகம் அமைந்துள்ள சாலைகள் பேரிகார்டு மூலம் மூடப்பட்டது. மேலும், பாதுகாப்பு பணியில் போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

* தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை
சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேற்று விசாரணையை துவங்கியுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சென்னை பிரிவு மண்டல இயக்குநர் ரவிவர்மா தலைமையில், ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்துறை இயக்குநர் இளங்கோவன் அடங்கிய குழுவினர் சிறுமிக்கு பிரேத பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம், சிறுமியின் இல்லம் ஆகிய இடங்களுக்கு நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.

The post சிறுமி கொலையை கண்டித்து தொடர் போராட்டம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை, சட்டசபை சாலைகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Puducherry Governor's House ,Assembly ,Puducherry ,Governor's House ,Chief Secretariat ,Congress ,
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு