×

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இடையே அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரி என 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அனைத்து கட்சிகளும், கூட்டணி, தொகுதி பங்கீடு என பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக திமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியது. அதன்படி, திமுக கூட்டணியில் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. அதன் அடிப்படையில், கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசார பணிகளை செய்ய உள்ளார். கூட்டணி கட்சிகளுடனான ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

இதில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கான தொகுதிகள் மட்டும் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, திமுக கூட்டணியுடன் முதன்முதலில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய காங்கிரஸ் கட்சியுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாமல் இருந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 தொகுதிகளும் புதுவை ஒரு தொகுதியும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கூடுதலாக 2 தொகுதி சேர்த்து 12 தொகுதிகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால் உடன்பாடு எட்டப்படாமல் இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த சூழ்நிலையில், தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை தொடர்ந்து, திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் காங்கிரஸ் மேலிட தலைவர்களை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொது செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினருடன் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

மேலும் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலை 4.35 மணிக்கு விமானம் மூலம் டெல்லி மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், அஜோய்குமார் ஆகியோர் சென்னை வந்தனர். அவர்களுக்கு, தமிழக காங்கிரஸ் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கிருந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து அண்ணா அறிவாலயம் சென்றனர். அவர்களை திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் வரவேற்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் சென்றனர்.

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், ‘‘நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று (9ம்தேதி) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியும் என மொத்தம் 10 தொகுதிகளை பங்கிட்டு கொள்வதென முடிவு செய்யப்பட்டது’’ என கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒதுக்கப்பட்ட தொகுதி எண்ணிக்கைகள் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரசுடன் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுகளுடனும் தொகுதி ஒப்பந்தம் முடிவடைந்து தொகுதி எண்ணிக்கையை திமுக நிறைவு செய்துவிட்டது.

அதேபோன்று, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தமிழ்நாட்டிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துள்ளதால் விரைவில் இங்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். திமுக கூட்டணியில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், அடுத்த கட்டமாக பிரசாரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

*21 தொகுதிகளில் திமுக நேரடி போட்டி
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்றுடன் நிறைவடைந்தது. அதன்படி, மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம், புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், விசிகவுக்கு 2 சீட், மதிமுகவுக்கு ஒரு சீட் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது போக திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

The post திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு: தொகுதி பங்கீடு அனைத்தும் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : Congress ,DMK ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Vidalalaya ,Tamil Nadu ,Puducherry ,Congress party ,DMK alliance ,All India alliance ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையம் நேர்மையாக...