×

திருவண்ணாமலை- திருக்கோவிலூர் இடையே ₹140 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம்

*முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை- திருக்கோவிலூர் இடையே ₹140 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட நான்கு வழிச்சாலையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாவட்டங்களை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலைகளை தரம் உயரத்தும் பணி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டின் மிக முக்கிய சாலைகளில் ஒன்றான சிசி ரோடு என அழைக்கப்படும் சித்தூர்-கடலூர் நெடுஞ்சாலையை தரம் உயர்த்தப்படுகிறது.

அதையொட்டி, திருவண்ணாமலை முதல் திருக்கோவிலூர் இடையே 28.2 கிமீ தூரமுள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் ₹140 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டு, திருவண்ணாமலையில் இருந்து விருதுவிளங்கினான் வரையிலான 19.5 கிமீ வரை ஒரு பகுதியாகவும், விருதுவிளங்கினான் முதல் திருக்கோவிலூர் வரையிலான 8.70 கிமீ தூரம் மற்றொரு பகுதியாகவும் என பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது.

இந்த சாலை விரிவாக்கத்தால், திருவண்ணாமலையில் இருந்து திருச்சி, மதுரை உளளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. வாகன போக்குவரத்து விரைந்து செல்லவும், விபத்துகள் தவிர்க்கப்படும் நிலையும் உருவாகியிருக்கிறது. திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட திருவண்ணாலை- திருக்கோவிலூர் சாலையை, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த காணொலி காட்சி மூலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, துறை செயலாளர் பிரதாப் யாதவ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதையொட்டி, திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் வாகன போக்குவரத்தை கொடியசைத்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், எம்பி சி.என்.அண்ணாதுரை, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்லஏ பெ.சு.தி.சரவணன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், எஸ்.பன்னீர்செல்வம், த.ரமணன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை- திருக்கோவிலூர் இடையே ₹140 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai- Thirukovilur ,Chief Minister ,M.K.Stalin ,Thiruvannamalai ,Thiruvannamalai-Thirukovilur ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...