×

39 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு; வயநாட்டில் ராகுல் மீண்டும் போட்டி: தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்பட 9 மாநில வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் முதல் பட்டியல் நேற்று வௌியிடப்பட்டது. 39 வேட்பாளர்கள் கொண்ட அந்த பட்டியலில் வயநாடு தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஷிமோகா தொகுதியில் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்பட 9 மாநில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே மார்ச் 2ம் தேதி பாஜ கட்சி 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அறிவித்துள்ளது. அடுத்த கட்ட பட்டியலும் பா.ஜவில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, முதல்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டது. இந்தியா கூட்டணியுடன் தொகுதி பங்கீடு முடிவான மாநிலங்களில் வேட்பாளர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கொண்ட காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி டெல்லியில் நேற்றுமுன்தினம் மாலையில் கூடி ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் தேர்தல் கமிட்டியில் அங்கம் வகிக்கும் அம்பிகா சோனி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.எஸ்.சிங்தியோ, முகமது ஜாவைத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவான மாநிலங்களில் இருந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான அறிவிப்பு நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. கட்சி பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், அஜய் மாக்கன், பவன் கேரா ஆகியோர் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டனர். அந்த பட்டியலில் மொத்தம் 39 பேர் இடம் பெற்று இருந்தனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் அங்குள்ள ராஜ்நந்த்கான் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். பெங்களூரு புறநகர் தொகுதியில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். ஷிமோகா தொகுதியில் நடிகர் சிவராஜ்குமார் மனைவியும், முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகளுமான கீதா நிறுத்தப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் தொகுதியில் மீண்டும் சசிதரூர் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளார். தெலங்கானாவில் வெளியான 4 தொகுதிகளில் பட்னம் சுனிதா மகேந்தர் ரெட்டி மட்டுமே பெண். அவர் செவ்வெல்லா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பாரதீய ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் அமைச்சராக இருந்த பட்னம் மகேந்திர ரெட்டி மனைவி ஆவார். இதே போல் நல்கொண்டா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனா ரெட்டி மகன் ரகுவீர் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

2023ல் நடந்த தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் நாகர்ஜூனா சாகர் தொகுதியில் ஜனா ரெட்டியின் இன்னொரு மகன் ஜெய்வீர் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இப்போது இன்னொரு மகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மெகபூபா பாத் தொகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் போரிகா பல்ராம்நாயக் நிறுத்தப்பட்டுள்ளார். ஜாகீராபாத் தொகுதியில் சுரேஷ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீதம் உள்ள மாநிலங்களில் உள்ள வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* அமேதியில் போட்டியிடுவாரா?
கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உபி மாநிலம் அமேதி தொகுதி பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. 2019ல் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். அதற்கு இம்முறை பழிதீர்க்க மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் களமிறங்குவார்என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பட்டியலில் அமேதி உள்பட உபி மாநிலத்தில் இருந்து எந்த ஒரு தொகுதியும் இடம் பெறவில்லை.

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை வேட்பாளர்கள்?

கேரளா 16
கர்நாடகா 7
சட்டீஸ்கர் 6
தெலங்கானா 4
மேகாலயா 2
நாகாலாந்து 1
சிக்கிம் 1
லட்சத்தீவு 1
திரிபுரா 1

The post 39 தொகுதிகளுக்கு காங்கிரஸ் முதல் பட்டியல் வெளியீடு; வயநாட்டில் ராகுல் மீண்டும் போட்டி: தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்பட 9 மாநில வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul ,Wayanad ,Telangana, ,Kerala, ,Karnataka ,New Delhi ,Lok Sabha elections ,Wayanadu ,Shivrajkumar ,Geeta ,Shimoga ,Telangana ,
× RELATED ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது...