×

₹53.39 கோடி மதிப்பீட்டில் ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை

*அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்

ராசிபுரம் : ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அடிக்கல் நாட்டினார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, அணைப்பாளையம் பிரிவு பகுதியில், நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர், ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் மோகனூரில் புதிய செவிலியர் குடியிருப்பு கட்டிடம், முத்துகாபட்டியில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.2 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை புதிய கட்டிடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

பின்னர், ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிள்ளாநல்லூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், புதுச்சத்திரம் செவிலியர் குடியிருப்பு கட்டிடம், சின்னவேப்பநத்தம் புதிய துணை சுகாதார நிலையம் ஆகிய முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். கலெக்டர் உமா தலைமை வகித்தார். ராஜேஸ்குமார் எம்பி, சின்ராஜ் எம்பி, சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

ராசிபுரத்தில்,ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை புதிய கட்டிடம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலையைச் சேர்ந்த மக்களுக்கும், ஏழை, எளிய கூலி விவசாய தொழிலாளர்களுக்கு அரும்பெரும் வாய்ப்பு. நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2.62 கோடியை மண் கொட்டும் பணிக்கு பரிந்துரை கடிதம் தருவதாக கூறினார்.

ராஜேஷ்குமாரை பொறுத்தவரை, ஒரு காரியத்தை எடுத்தால், அதை வெற்றி பெற செய்கிற வரை ஓயமாட்டார். அதே போல் மாவட்டத்திற்கு ககெ்டராக வந்தவர் மருத்துவராகவும் இருக்கிற காரணத்தினால் நாமக்கல் மாவட்டத்தை மேம்படுத்துவார். மேலும் குஜராத்தில் இருந்து வந்த போதை பொருட்கள், இப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ராசிபுரத்தில் ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக இன்னொரு தலைமை மருத்துவமனை திருச்செங்கோடு என்கிற வகையில் இரு மருத்துவமனைகளின் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சித்தா மருத்துவக் கல்லூரி என்கிற கோரிக்கை கடிதத்தை முதன் முதலில் ராஜேஷ்குமார் எம்பி என்னிடத்தில் ஒரு பிரதியும், முதலமைச்சரிடமும் தந்தார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தினால், நாமக்கலில் ஏற்கனவே இருக்கும் மருத்துவமனையை சித்த மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்ற வகையில் அதற்கு இப்பொழுது ரூ.2 கோடி அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு என கூறப்பட்டது. முதல் தவணையாக ஒரு கோடி கிடைக்க பெற்று இருக்கிறது.

சித்த மருத்துவமனை பணி தொடங்கி உள்ளது. மேலும் மோகனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் குடியிருப்பு ரூ.33 லட்சம் செலவில் கட்டும் பணியினை தொடங்கி வைத்திருக்கிறோம். நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர் குடியிருப்பு ஒன்றை திறந்து வைத்திருக்கிறோம். அதே போல் சின்ன வேப்பநத்தம் பகுதியில் ஒரு துணை சுகாதார நிலைய கட்டிடம் 30 லட்சம் செலவில் கட்டப்பட்டது ஆக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பொருத்தவரை ஒரு கோடியே மூன்று லட்சம் செலவில் கட்டப்பட்டவைகள் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ராஜேஷ் குமார் எம்பி கூறுகையில், நம்முடைய முதலமைச்சர் இந்த ராசிபுரத்திற்கு மாவட்ட தலைமை மருத்துவமனையை வழங்கி இருக்கிறார்கள். ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, புதுப்பட்டி, பிள்ளாநல்லூர் ஆகிய பேரூராட்சிகள் அத்தனூர் உட்பட ரூ.850 கோடியில் மிகப்பெரிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த போதமலைக்கு சாலை, அமைத்திட அதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் இப்போதுதான், முடித்த மாவட்டத்திற்கு தற்போது ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் 14,000 பட்டாக்களை மட்டும் நாங்கள் இருவரும் வழங்கினோம். நாமக்கல்லுக்கு தமிழ்நாட்டிலே இல்லாத அளவுக்கு ஒரே புறவழிச்சாலைக்கு ரூ.194 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது முதலமைச்சர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவக்கி வைக்க ஆணை பிறப்பித்து உள்ளார். இத்தனை பணிகளும் திமுக ஆட்சியால் மட்டும்தான் முடியும். நாமக்கல் மாவட்டத்திற்கு 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை அறிவித்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ₹53.39 கோடி மதிப்பீட்டில் ராசிபுரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை appeared first on Dinakaran.

Tags : District Head Hospital ,Rasipuram ,Minister ,M.Subramanian ,Namakkal district ,Rasipuram taluk ,Dampalayam ,Department of Medicine and People's Welfare ,
× RELATED ரங்கோலி வரைந்து விழிப்புணர்வு பிரசாரம்