×

குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி ஏர்வாடியில் விளையாட்டு மூலம் போலீசார் விழிப்புணர்வு

நெல்லை : ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவிய வதந்தியை அடுத்து தவறான தகவல் பரவும் விதம் குறித்து விளையாட்டின் மூலம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நெல்லை மாவட்டம் ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் அடுத்தடுத்து பரவின. இந்த தகவல்கள் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மத்தியில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏர்வாடி போலீசார் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட வலைதள தகவல்கள் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் சில விஷமிகள் தகவல்களின் முழு உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நபர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நெல்லை எஸ்பி சிலம்பரசன் உத்தரவின்படி, நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னகுமார் முன்னிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஏர்வாடி இன்ஸ்பேக்டர் தர்மராஜ் தலைமையில் போலீசார் பொதுமக்களை ஒருங்கிணைத்து நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

ஏர்வாடி, 6வது தெரு பூங்கா அருகே நடந்த இந்நிகழ்ச்சியில் பொதுமக்களை போலீசார் வரிசையாக நிற்க வைத்து முதலில் உள்ள நபரிடம் ஒரு தகவலை கூறி அடுத்தடுத்து உள்ள நபர்களிடம் அதை சொல்ல வைத்தனர். இறுதியில் முதல் நபரையும், கடைசி நபரையும் அந்த தகவலை கூற செய்தபோது முதலாவது நபர் கூறிய தகவலுக்கும் கடைசி நபர் கூறிய தகவலுக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. இதைப் பார்த்து ரசித்த மக்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர்.

பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை

ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் கூறுகையில் ‘‘ஏர்வாடியில் கடந்த வாரம் பஸ் நிலையம் அருகே 3 மாணவிகளை காரில் கடத்த முயற்சி நடந்ததாக ஒரு தகவல் பரவியது. இதுதொடர்பாக அந்த பள்ளி மாணவிகளை நேரடியாக விசாரணை நடத்தியதில் அவர்கள் பள்ளிக்கு தாமதமாக சென்றதால் திருப்பி அனுப்பப்பட்டதும், அதை மறைக்க அந்த மாணவிகள் தங்களை கடத்த முயற்சி நடந்ததாக பெற்றோர்களிடம் தெரிவித்ததும் தெரியவந்தது. இதை முழுமையாக தெரிந்து கொள்ளாத சிலர் சமூக வலைதளங்களில் மாணவிகள் காரில் கடத்த முயற்சி என்று தகவலை பரவ விட்டனர்.

அதுபோல் ஏர்வாடியில் தெருக்களில் சிவப்பு ெஹல்மேட் நபர் குழந்தைகளை கடத்த சுற்றுவதாக ஒரு தகவல் பரவி மக்களை பீதியடையச் செய்தது. உடனடியாக அந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை கொடுக்க சென்றவர் என்பது தெரியவந்தது. அதுபோல் கடத்தல்காரர்களிடம் சிக்கிய 10 வயது சிறுவன் கராத்தே தாக்குதலில் ஈடுபட்டு தப்பி வந்ததாக ஒரு தகவல், இருச்சக்கர வாகனத்தில் சென்ற மர்மநபர் சிறுவர்களை இருட்டில் செல்லுமாறு கூறி கடத்த முயற்சி என ஏகப்பட்ட வதந்திகள் பரவின. பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரவ விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

வதந்தியால் வந்த விபரீதம்

குழந்தைகள் கடத்தப்படுவதாக பரவும் வதந்தியை நம்பி பொதுமக்கள் பலர் பீதியில் உள்ளனர். இதனால் கிராம மக்கள் புதிய நபர்களை சந்தேகித்து தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நெல்லை, சீவலப்பேரி அருகே நேற்று முன்தினம் சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததற்காக ஆட்டோவில் சென்ற நபர் மீது பொதுமக்கள் சிலர் குழந்தைகளை கடத்த முயன்றதாக சந்தேகித்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஆனால் அவர் எதேச்சையாக குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தது பின்னர் தெரியவந்தது. அந்த நபர் புகார் அளிக்க முன்வரவில்லை.’’ என்றனர்.

The post குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி ஏர்வாடியில் விளையாட்டு மூலம் போலீசார் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Airwadi ,Nellai ,Nellai district ,Dinakaran ,
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...