×
Saravana Stores

‘‘மகாசிவராத்திரியில் கிருஷ்ணகானம்’’

நர்மதை நதிக் கரையோரம் அமைந்திருந்த பரந்த சமஸ்தானத்தின் மன்னராக மகாராஜா சிவசங்கர் நல்லாட்சிபுரிந்துவந்தார். மகாராஜா சிவசங்கர் மன்னர் மட்டுமல்ல, சிறந்த புலமையும், கவிபாடும் திறமையும் நிரம்பியவர். சைவ சமயத்தின் பால், மிகுந்த பற்றுக்கொண்டவர். சிவபெருமான் மீது அளவற்ற பக்தி யுடையவர். அவர்மீது ஏராளமான துதிப்பாடல்கள் இயற்றியுள்ளார். எந்த நேரமும் சிவன் நாமமே மூச்சாகக் கொண்டு, சிவசிந்தையிலேயே உழன்றுவருபவர்.

சிவனடியார்களையும், பாகவத சிரோன்மணிகளையும் ஆதரிப்பதில் ஈடு இணையற்றவர். அவர்களை அரவணைத்து தம் அரண்மனையில் வைத்து ஆதரித்தார். தாம் இயற்றிய சிவன் துதிப் பாடல்களை யெல்லாம் அவர்களைப் பாடவைத்துக் கேட்டு இன்புற்று வந்தார். ஆனாலும், அவருக்கென்று ஓர் ஆசை இருந்துவந்தது.

அவர் ஆட்சிபுரிந்து வந்த தலைநகரிலிருந்து வெகு தூரத்தில், எல்லைப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில், வித்யாபதி என்றொரு மகான் வாழ்ந்துவந்தார். மாபெரும் இசைஞானி அவர். அவரது குரல் இனிமையையும், இசைஞானத்தையும் அப்பகுதி மக்கள் போற்றிவந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட மகாராஜா சிவசங்கர், அவரைக் காண ஆசைப்பட்டார். மகான் வித்யாபதி எந்தப் பாடலைப் பாடினாலும் அது தெய்வீக கானமாக கேட்போர் மனதில் ஆழமாகப் பதிந்தது, மகிழ்ச்சி ஆட்பட்ட நாகம் போல் மயங்கவைத்தது.

வித்யாபதியின் புகழ் எங்கும் பரவிக் கிடந்தது. மன்னர் சிவசங்கருக்கு, தான் இயற்றியுள்ள சிவன் துதிப் பாடல் களையெல்லாம் மகான் வித்யாபதியின் இன்குரலில் கேட்டு மகிழ வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையும், மிகவும் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நாளும் வந்தது. நர்மதை நதிக்கரையில் இருந்த பரந்பூர் என்ற ஊரில், பெரிய சிவாலயம் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு, அதன் குடமுழுக்கு விழா மன்னர் சிவசங்கர் முன்னிலையில் நடைபெற இருந்தது.

இந்த நாளில் மகான் வித்யாபதியின் நீண்ட கச்சேரியும் நடைபெறுவதாக இருந்தது. உரிய நாளில் மன்னர் தம் மகாராணியுடன் பரிவாரங்கள் புடைசூழ, பரத்பூர் போய்ச் சேர்ந்தார். சிவாலயத்தின் கும்பாபிஷேக விழாவைத் துவக்கி வைத்து சிறப்புச் செய்தார். அவரது விருப்பப்படியே மகான் வித்யாபதியின் இசைக் கச்சேரி தொடங்கியது. மகான் வித்யாபதி தேனினு மினிய தன் இன்குரலால் ஏராளமான பாடல்களைப் பாடி, மன்னர் உட்பட மக்கள் அனைவரும் போற்றிப் புகழும்படி சிவபெருமான் குறித்து பல அரிய பாடல்களைப் பாடினார். மக்கள் மெய் மறந்து கேட்டனர். மன்னர் பெரிதும் இன்புற்றார்.

மகானின் இன்னிசையை மிகவும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த மன்னர், ‘‘தேவி! நான் இயற்றியுள்ள ஏராளமான சிவஸ்துதிப் பாடல்களையெல்லாம் இந்த மகான் பாடினால் எப்படி இருக்கும்? இவரை அழைத்துச் சென்று பாடவைத்துக் கேட்க வேண்டும் என மிகவும் விரும்புகிறேன்!’’ என்றார்.‘‘பிரபு! எங்கேயோ வெகு தூரத்தில் கிராமத்தில் வசிக்கும் மகான் வித்யாபதியை, நாம் அடிக்கடி அழைக்க முடியாது.

எனவே, அவரை சகல மரியாதையுடன் அழைத்து, இங்கேயே அவருக்கு ‘ஆஸ்தானகவி’ என்கிற கௌரவத்தைக் கொடுத்து, நம்முடனேயே அழைத்துக் கொண்டு செல்வோம்! என்று ஆலோசனை கூறினாள், மகாராணி நந்தினி நாச்சியார்! மன்னர் சிவசங்கரும் மகிழ்ச்சி யோடு ‘அப்படியே செய்வோம்’’ என்று ஆமோதித்தார்.மகானின் கச்சேரி நிறைவு பெற்றதும், ராணி கூறியபடியே மகான் வித்யாபதியை மன்னர், பரிவாரங்கள் புடைசூழ அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார். மன்னர் சிவசங்கர், அவருக்கு பல பரிசுகளை அள்ளிக் கொடுத்து முறைப்படி வரவேற்று, கௌரவித்து ‘ஆஸ்தான கவிஞர்’ என்ற பட்டத்தையும் அளித்துப் பாராட்டி மகிழ்ந்தார். மன்னர், மகானுக்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதித்தார்.

அதாவது, சிவபெருமான் புகழ் மட்டுமே பாட வேண்டும். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற தெய்வங்களின் பாட்டெல்லாம் வேண்டாம்.’’ என்றார். மகானும் அதை ஒப்புக்கொண்டார். அன்று இரவு களைப்பின் மிகுதியால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் வித்யாபதி. அப்போது நடுஇரவு. யாரோ அவர் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போல் உணர்ந்தார். கண்
விழித்துப் பார்த்தார்.

அங்கே கோடி சூரியப் பிரகாசத்தோடு தேஜோமயமாக புன்னகை பூத்த வண்ணம் சிவபெருமான் தரிசனம் தந்தார். ஆச்சரியத்தில் திக்கு முக்காடிப்போன வித்யாபதி, பரவசத்தால் கண்கள் கண்ணீர் மழை பொழிய, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். பிரமன் புன்னகையுடன், ‘‘வித்யாபதி! உனது அற்புதமான இனிய குரலில், மன்னர் இயற்றிய பாடல்களைக் கேட்டேன். எல்லோரும் இன்புற்று மகிழ்ந்தது போலவே, நானும் செவிகுளிரக் கேட்டு மகிழ்ந்தேன். மிக்க மகிழ்ச்சி.

என்னைக் குறித்து நீ பாடிய பக்திப் பாடல்கள் கேட்கக் கேட்க ஆனந்தமாக இருந்தது! ஆனால், எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எவை என்று தெரியுமா? ஜயதேவரின் `அஷ்டபதி’, சந்தோஷமும் மகிழ்ச்சியும் குதூகலமும் ஒரு சேர அளிக்கும் `கிருஷ்ணகானம்’, `ஹரிநாமபஜன்’, `ராமநாம சங்கீர்த்தனங்கள்’. இன்னும் அமிர்தத்துக்கு ஒப்பான `கோவிந்த நாம சங்கீர்த்தனங்கள்’ போன்றவைகள்தான்.

அப்பாடல்களையே நான் விரும்பிக் கேட்பேன். அதுவும் உன் போன்ற இசை மேதைகள் பாடிக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். பெருமைக்குரிய கிருஷ்ணாவதாரத்தில், ராதையின் பிரேம பக்திக்கு வடிவம் கொடுப்பதைப் போலப் பேரன்போடு அவள் பொழிந்த ஆழ்ந்த பக்தியை நீ உணர்ந்து அப்பாடல்களைப் பாட வேண்டும். ராதையின் பக்தி உயர்ந்தது. உன்னதமானது. அதற்கு ஈடு இணை ஏதுவுமில்லை. நான் விரும்பும் கிருஷ்ணாமிர்த கானங்களை வருகிற மகாசிவராத்திரியன்று உன் இனிய குரலில் கேட்டு மகிழ விரும்புகிறேன்!’’ என்று கூறிய இறைவன், அவரை ஆசீர்வதித்துவிட்டு மறைந்தார்!. இறைவனின் திருவாக்கைக் கேட்ட வித்யாபதி, மெய்சிலிர்த்து சிலையாக நின்றார்.
கண்களை கண்ணீர் பொழிய. தனக்குக் கிடைத்த இறையருளை எண்ணி இறும்பூ தெய்தினார்.

அச்சமயம் வித்யாபதி தன்மீது ஒரு மாபெரும் சக்தி படருவதை உணர்ந்தார். மனம் நிலைகொள்ளவில்லை. குதூகலம் கொண்டாடியது. மனம் உருக மீண்டும் மீண்டும் இறைவனைத் துதித்தார். கண் களில் கண்ணீர் பெருகியது. கயிலைநாதன் தன் கனவில் வந்து அருளியது எண்ணி எண்ணி விம்மினார்.மறுநாள் விடியற்காலையில் நீராடி விட்டுவந்து, பூஜை அறையில் அமர்ந்தார். அவரை அறியாமல் மடை திறந்த வெள்ளம் போல் பிரவாகித்தது கிருஷ்ணாமிர்த கானங்கள்! ராதா தேவியைப் பிரகிருதியாகவும், கிருஷ்ணபரமாத்மாவை பிரம்மாகவும் வருணித்து அழகான பண்களில் இனியராகங்களில் பாடினார்.

மகாராஜா சிவசங்கரின் அரண்மனை. அன்று மகா சிவராத்திரி. அரசரின் அத்தானி மண்டபத்தில் ஏராளமான மக்களும் மந்திரிப்பிரதானிகளும் கூடியிருந்தனர். ஆலய மணிகள் முழங்கின. இன்னொரு புறம் சங்கநாதம் ஒலித்தது. கூடவே இனிய இசைக்கருவிகளும் ஒலித்தன. பிரதானமான மேடையின்மீது அமர்ந்து, மகான் வித்யாபதி, மகாராஜா சிவசங்கர் இயற்றிய சிவஸ்துதிகளைப் பாடி எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.

மன்னர் உட்பட அங்கே கூடியிருந்தோர் அனைவரும் மெய்மறந்து, அந்த நாதவெள்ளத்தின் இனிமையில் மூழ்கிப் போனார்கள். விதவிதமாகப் பண் அமைத்துப் பல விதமான ராகங்களில் பாடி குறிப்பாக, சிவனுக்குப் பிடித்தமான சாமகானம் பாடி, எல்லோரது பாராட்டுக்களையும் பெற்றார். சிவஸ்துதியைப் பாடிக் கொண்டிருந்த வித்யாபதி, தன்னை அறியாமலேயே அதை விடுத்து, ராதாகிருஷ்ண பிரேமை தத்துவத்தை அபூர்வ ராகத்தில் பாடத் தொடங்கினார். கையில் மன்னர் இயற்றிய சிவதோத்திரப் பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் வைத்திருந்தாலும், அவற்றைப் பார்த்த படியே கிருஷ்ணகானம் பொழிந்தார். ஆகா என்ன இனிமை!.

‘கண்ண பெருமானின் குழலோசையின் இனிமை கேட்டு, பசுக்கள் தம் வசமிழந்து, கன்றுகளை மறந்து கண்ணனை நாடி ஓடி வருகின்றன’.‘பறவையினங்கள் பாட மறந்து, பசுங்கிளைகளிலேயே ஒன்றி அமர்ந்து கண்களை, மூடிய வண்ணம் குழலிசை கேட்டு சிலையாக வீற்றிருக்கின்றன’.`கோபியர்கள் தங்கள் கடமைகளை மறந்து, பரவசத்தோடு குழலோசை கேட்டு ஓடி வருகின்றனர்’.‘சேராதவரையும் சேரவைத்து வெல்லும் சிறப்பு உள்ள கோவிந்தனே! உன்னைப் புகழ்ந்துபாடி, அறைபறை அடித்து கொடி பிடித்து, சங்கு ஊதி, விதானத்தின் கீழே நப்பின்னனை, கிருஷ்ணனுடன் நடந்து நாடு புகழும் பரிசுகளாக நாங்கள் பெறுவோம். அதனால் நன்றாக ஆடை உடுப்போம்.

சூடகம் தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என கை முதல் கால் வரை பல ஆபரண அணிகளைப் பூணுவோம். அதன்பின் எல்லோரும் சேர்ந்திருந்து உள்ளம் மகிழ உன்னையே பாடித் துதித்திருப்போம். எங்களை உய்விக்க வந்த கண்ண பெருமான் நீதானே!‘இறைவா! கோவிந்தா! உலக அறிவற்ற ஆயர்குலத்தில் உன்னைப் பிள்ளையாகப் பெற்ற பேற்றை புண்ணியமாக நாங்கள் பெற்றோம். குறை ஒன்றும் இல்லாத உன்னோடு அறியாத பிள்ளையாக நாங்கள் கொண்டிருக்கும் உறவை நம்மால் ஒழிக்க முடியாது. அன்பால் உன்னைச் சிறுபேர் பொருட்படுத்தாமல் மன்னித் தருள்வாய்!’ என்று கோபியர்கள் வேண்டுகிறார்கள்! கண்ணனே காக்கும் தெய்வம் என்கிறார்கள்!.

‘நந்த கோபன், யசோதை என்ற இரு ஆயர் குலத்தலைவர்களுடைய திருமகன் இளஞ்சிங்கம் போன்றவன், கரிய திருமேனியும், சிவந்த கண்ணும், சூரிய சந்திரர் போன்ற முகமும் உடைய கிருஷ்ணன், பூரணாபதாரம் செய்துள்ள அந்த முழு முதற் கடவுளான பிரம்மமே நாராயணன்! உலகோர் புகழ அவனைப் பணிந்து, அவன் புகழ்பாடி கிருஷ்ணானு பவம் பெற விரும்புகிறவர்கள் வரலாம். பக்தர்களே! இதை கவனத்தில் கொள்வீர். ஏனெனில் நாராயணனே முழுமுதற் கடவுள் நமக்கு வேண்டியதை அளிப்பவன் அவனே!’

இப்படியெல்லாம் வித்யாபதி மெய் மறந்து இனிய ராகங்களில் கிருஷ்ணாமிர்த கானங்களைப் பாடியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் மன்னர். சிறந்த மற்றும் தீவிர சிவ பக்தரான மன்னர், அனலிடைப்பட்ட புழுபோல் துடித்தார். சிவபெருமானை மட்டுமே போற்றி வழிபடும் ஆலயத்தில், கிருஷ்ண கானமா? மன்னரால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. முகம் சிவந்தது, மீசை துடித்தது! நேற்று வரையில், தான் இயற்றிய சிவஸ்துதிகளையே பாடிக் கொண்டிருந்த வித்யாபதிக்கு என்னாயிற்று ஏனிந்த மாற்றம்? எதனால் வந்தது? சிவஸ் துதியில் ஈடுபட்டிருந்த வித்யாபதியா இன்று கிருஷ்ணகானம் பாடிக்கொண்டிருக்கிறார். சிவனை ஆராதிக்கும் மன்னனைப் பார்த்து அவமதிக்கும் செயலா இது?

சிவபெருமான் குறித்த திவ்யப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானே அவரை அரசவைக் கவிஞன் ஆக்கினேன்? சைவ சமயத்தை விட்டு வைணவத்துக்கு எப்படி மாறினார்..? மேன்மை மிகு சைவத்துக்கு இவரால் இழுக்கு நேர்ந்ததே! ஆ.ஆ…! கேட்கக் கூடாத கானங்களையெ்லலாம் கேட்கும் படியாயிற்றே? புலவர் இப்படி துரோக மிழைத்து விட்டாரே! இறைவா! இது என்ன சோதனை? இந்த அபச்சாரத்தை எப்படிப் போக்குவேன்?’ என்று மன்னர் மனம் கலங்கி வேதனையுற்றார்.

கூடவே பெருஞ்சினம் மூண்டது. மந்திரிப் பிரதானிகளும் மக்களும் நிரம்பியிருந்த அத்தாணி மண்டபத்தின் சூழ்நிலையை முற்றிலும் மறந்து, ‘அந்த மகானைக் கண்டித்தார். மகான் வித்யாபதி தலைகுனிந்து நின்றார். மகாராணி நந்தினி நாச்சியார் செய்வதறியாது திகைத்து நின்றாள். எல்லோரும் ஒருவித அச்சத்துடன் மகான்வித்யாபதியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கோபத்தின் உச்சியில் இருந்த மன்னர் சிவசங்கர், அமைச்சரை நோக்கி, ‘‘அமைச்சரே! அரசவையில் அரசனை அவமதித்த இவருக்கு மரண தண்டனை அளிக்கிறேன்.

கொண்டுபோய்ப் பாதாளச் சிறையில் அடையுங்கள்..! என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு அவையைவிட்டு வெளியேறினார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் அரசனிட்ட கட்டளையைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளானார்கள்!மன்னர் அளித்த தண்டனையைக் கேட்ட வித்யாபதி, சிறிதும் வருத்தப்படவில்லை. ‘எல்லாம் இறைவன் செயல்’ என்றெண்ணி வாளாவிருந்தார். அரண்மனைக் காவலர்கள் அவரைப் பாதாளச்சிறையில் கொண்டு போய் அடைத்தார்கள்! சில நாட்கள் கழிந்தன!

ராஜா சிவசங்கரின் அமைதியான வாழ்க்கைக்கு ஒரு கடும் சோதனை ஏற்பட்டது. தனது பேரரசை விரிவுபடுத்த எண்ணிய டில்லி சுல்தான், பெரும்படையுடன் வந்து மன்னர் சிவசங்கரின் சமஸ்தானத்தைக் கைப்பற்ற எண்ணி, எதிர்பாராத நேரத்தில் திடீரென்று வந்து தாக்கினான். ராஜா சிவசங்கரின் ஆட்சி வீழ்ந்தது. மன்னர் கைது செய்யப்பட்டு டில்லிக்குக் கொண்டுப் போகப் பட்டார். அவரது சமஸ்தானத்தில் சுல்தானின் பிரதிநிதியின் ஆட்சி அமைக்கப்பட்டது. மகாராணியும் மற்றவர்களும் அடிமையாக நடத்தப்பட்டார்கள். மகாராஜாவைப் பிரிந்த மகாராணி நந்தினி நாச்சியார் மிகுந்த வேதனையில் இருந்தார். இப்படியெல்லாம் துன்பம் நேரக் காரணம், மகானை தண்டித்ததுதான் என்பதையுணர்ந்த ராணி, அமைச்சரை அழைத்து மகானை விடுதலை செய்து அழைத்து வரச் செய்தார்.

`‘மகாபண்டிதரே! நடந்ததை மறந்துவிடுங்கள். மகாராஜா, உங்கள் மனம் வேதனைப் படும்படி அவமரியாதை செய்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதனால்தான் கடவுள் அவருக்கு இந்த தண்டனையைக் கொடுத்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். அவரது செய்கைக்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் சுவாமி’ என்றாள். `எல்லாம் ஈசன் செயல்’ என்றார் வித்யாபதி.

`டில்லி சுல்தானிடமிருந்து அவரை நீங்கள்தான் விடுவித்து அழைத்து வரவேண்டும். அது உங்களால் மட்டுமே முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆவன செய்யுங்கள் சுவாமி!’ என்று பணிவுடன் வணங்கிக் கேட்டுக்கொண்டாள்.உடனே வித்யாபதியும், டில்லி நோக்கிப் புறப்பட்டார். சுல்தானை சந்தித்துத் தன்னை ஒரு பாடகராகவே அறிமுகப் படுத்திக்கொண்டார். வித்யாபதி முன்னமேயே அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த சுல்தான், அவரைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார். சில நாட்கள் வித்யாபதியின் சங்கீத மழையில் நனைந்தார்.

ஆனால், சுல்தானின் சபையில் இருந்த மற்ற சங்கீத வித்வான்களுக்கு இது பிடிக்கவில்லை. ‘‘சங்கீதத்தில் தங்களுடன் போட்டியிட்டு வித்யாபதி தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்’’ என்று அவர்கள் வேண்டிக்கொண்டார்கள். சுல்தானும் இசைப் போட்டிக்கு உத்தரவிட்டார். அரசவை கூடிற்று. பொதுமக்களும் பிரதானிகளும் ஆவலோடு வந்து குழுமினார்கள்.

சிவனருள் பெற்ற வித்யாபதி, ராதாகிருஷ்ண பிரேமைத் தத்துவத்தை அற்புதமாகப் பாடினார். அந்த இனிமையான இசையைக் கேட்டுப் போட்டியிட்ட சங்கீத மேதைகளும், வித்வான்களும் மயங்கிப் பரவசமானார்கள். பொது மக்களும் மகிழ்ந்து கரகோஷம் செய்து வாழ்த்தினார்கள். சுல்தானும் பக்தி மணம் கமழும் இசையில் மனதைப் பறிகொடுத்தார். வித்யாபதி சங்கீதத்தில் மாபெரும் மேதை என்பதையுணர்ந்த மற்ற வித்வான்கள், மனமுவந்து அவரைப் பாராட்டினார்கள். எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரண்டோடியது.

டில்லி சுல்தான் மகிழ்ச்சியுடன் மகான் வித்யாபதியை அழைத்து, ‘‘பண்டிதரே! அனைவரையும் பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்துப் பரவசப்படுத்திய உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்? தயங்காமல் கேளுங்கள் எதை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறேன்’’ என்று வாஞ்சையோடு கேட்டார்.‘‘மகாராஜா! நான் தங்களிடம் பொன் பொருளை நாடிவரவில்லை. தாங்கள் கைது செய்துகொண்டு வந்து, சிறைப்படுத்தியுள்ள எங்களது அன்பான மன்னர் சிவசங்கரை தக்க ராஜமரியாதையுடன் விடுதலை செய்து, மறுபடியும் அவர் எங்கள் மன்னராக ஆட்சிபுரிய அனுமதியுங்கள். மேன்மை தாங்கிய தங்களின் பேரரசின் கீழ் அடங்கிய சிற்றரசராக இருக்க அங்கீகரித்து, ஆணையிடுங்கள். இது ஒன்றே நான் கோரும் பரிசு!’’ என்று பணிவாக சுல்தானிடம் கேட்டுக் கொண்டார் மகான் வித்யாபதி.!

வித்யாபதியின் வேண்டுகோளை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட டெல்லி சுல்தான், உடனே ராஜா சிவசங்கரை விடுதலை செய்தான். ராஜ மரியாதையுடன் அவரது நாட்டுக்கு அனுப்பி வைத்தான். நாடு திரும்பிய மன்னர், மிக்க மகிழ்ச்சியுடன் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார். மகானை அவமதித்த குற்றத்துக்காக மிகவும் வருத்தமுற்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மகாராணி நந்தினி நாச்சியாரும், நாட்டு மக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நாட்கள் கடந்தன.

மீண்டும் மகாசிவராத்திரி வந்தது! அரண்மனையில் அரசர் உட்பட அனைவரும் கூடியிருந்தார்கள். அரண்மனை சிவாலயத்தில், மகான் வித்யாபதியின் சிவஸ்துதிகளும், கிருஷ்ணகானங்களும் தேனருவியாய்ப் பொழிந்து, கேட்போர் அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. பின்னர், சில நாட்கள் மன்னர் கேட்டுக் கொண்ட படி, சிவஸ்துதிகளையும், கிருஷ்ண கானங்களையும் பாடி மகிழ்வித்துவிட்டுத் திருத்தலயாத்திரை புறப்பட்டார், வித்யாபதி! சிவஸ்துதிகளையும், கிருஷ்ணகானங்களையும் ஊர்கள்தோறும் சென்று மக்களிடையே பரப்பினார். ஓரிடம் நில்லாமல் பீகார், உத்திரபிரதேசம், வங்கம் போன்ற பல மாநிலங்களிலும் அவர், ராதாகிருஷ்ண தத்துவத்தை தமது அழகான துதிப் பாடல்களில் அமைத்து, இனிய குரலில் பாடிப் பரவினார்.

அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் புகழ் எங்கும் பரவியது. வயது முதிர்ந்து பழுத்த பழமாக ஆகும் வரை, மகான் வித்யாபதி தொடர்ந்து பிரயாணம் செய்தவாறே, தனது ஆன்மிக யாத்திரையை கங்கைக் கரையில் வந்து முடித்துக் கொண்டார். ஆம். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.புனித கங்கைக்கரையில் அவர் வீற்றிருக்க, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, புனித கங்கையின் பேரலைகள் திடீரென எழுந்து சுற்றிச்சூழ்ந்து அவரை அரவணைத்தது.

கண்ணிமைப் பொழுதில் அந்தப் புண்ணிய நதியில் அமிழ்ந்து ஜலசமாதி அடைந்துவிட்டார், மகான் வித்யாபதி. மகான் வித்யாபதியின் பஜனை கீதங்கள் இன்றும் பீகார், உத்தரப்பிரதேசம், வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமங் களில் எல்லாம் இசைக்கப்படுகின்றன. அதுவும் மகாசிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில், சிவஸ்துதியுடன் கிருஷ்ணகானங்களும் சேர்ந்தே ஒலிக்கும் அபூர்வமான பஜனைகளைக் கேட்கலாம். சிவபெருமானின் பக்தராக இருந்து, ராதாகிருஷ்ண தத்துவத்தைப் பஜனையாகப் பாடிய மகான் வித்யாபதியின் போதனைகள், சைவ – வைணவ சமய ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இன்றும் விளங்குகின்றது.

டி.எம்.ரத்தினவேல்

The post ‘‘மகாசிவராத்திரியில் கிருஷ்ணகானம்’’ appeared first on Dinakaran.

Tags : Maharaja Sivashankar ,Narmada River ,Paul ,Lord Shiva ,
× RELATED ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம்...