திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலையில் பிரமாண்டமான புத்தக திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் 100 அரங்குகள் மற்றும் லட்சக்கணக்கான புத்தகங்களுடன் வரும் 16ம் தேதி வரை நடைபெற உள்ள பிரமாண்ட புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். டிஆர்ஓ பிரியதர்ஷினி வரவேற்றார்.
பிரமாண்ட புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு, அதற்கான நிதியையும் ஒதுக்கியிருக்கிறார். அதன் அடிப்படையில், திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா நடக்கிறது. புத்தகங்கள் நம்முடைய அறிவை ஆற்றலை மேம்படுத்துகிறது. தினமும் ஒருமணி நேரமாவது புத்தகத்தை படிக்கும் பழக்கத்தை இன்று வரை பின்பற்றி வருகிறேன். பேரறிஞர் அண்ணா தான் வாசிப்பு பழக்கத்தை திராவிட இயக்கத்தினரிடம் ஏற்படுத்தினார். எனவே தான், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் பிரமாண்ட நூலகத்தை கலைஞர் உருவாக்கினார்.
அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் நூற்றாண்டு விழாவின்போது சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தினார். அந்த நூலகத்தை அமைக்கும் வாய்ப்பு என்னிடம் அளித்தார். அதனை திருவண்ணாமலைக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். புத்தகங்கள் மனதை பண்படுத்துகிறது. அறிவையும் ஆற்றலையும் தருகிறது. தமிழ்நாட்டில் 4,634 நூலகங்களை அரசு நடத்துகிறது. புத்தகங்கள் வாங்குவது முதலீடு. அது நமக்கு எப்போதும் லாபத்தை தரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், 1,278 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், பிரியா விஜயரங்கன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட நூலக அலுவலர் வள்ளி நன்றி கூறினார்.
The post பிரமாண்ட புத்தகத் திருவிழா அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.