×
Saravana Stores

இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது!

நன்றி குங்குமம் தோழி

சிந்து கணபதி, முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதனையாளர்

ஒரு தனி நபர் சாதிப்பதற்கு பாலினமோ, பணமோ ஒரு தடை இல்லை என்பதனை தன்னுடைய விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை மூலம் மக்களுக்கு நிரூபித்து காட்டி, சாதாரண டெக்னீஷியன் பதவியில் இருந்து தற்போது பலர் மதிக்கக்கூடிய ஒரு இடத்திற்கு தன்னை உயர்த்தி காட்டிஉள்ளார் திருநங்கை சிந்து கணபதி. ‘‘சொந்த ஊர் நாகர்கோவில், பள்ளி படிப்பு வரை அங்கு இருக்கும் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். என் சின்ன வயசில் அப்பா இறந்துட்டாரு. அம்மாவும் சகோதரிகளும்தான் என் ஆதரவு.

அப்பா வேலையில் இருக்கும் போது தவறியதால், வாரிசு அடிப்படையில் ரயில்வே வேலை என்னுடைய பதினெட்டு வயதில் எனக்கு கிடைத்தது. 2003லிருந்து ஆறு வருஷம் எர்ணாகுளம், திருவனந்தபுரம் கிளையில் வேலை பார்த்து வந்தேன். தொலைதூர கல்வியின் மூலம் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்து முடித்தேன். பின் மதுரைக்கு ட்ரான்ஸ்பர் கிடைத்தது. அந்த சமயத்தில் தான் என் உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் எனக்குள் தெரிய ஆரம்பித்தது.

மேலும் மற்றவர்கள் பார்வைக்கும் அந்த மாற்றம் தென்பட்டதால், 2010-ல் வீட்டை விட்டு வெளியேறினேன். வேலை செய்யும் இடத்தில் கிண்டல் கேலியினை சந்திக்க நேரிடும் என்று நினைத்து வேலையை விட்டுட்டேன். கிட்டதட்ட 18 மாதங்கள் வெளி இடங்களில் மற்ற திருநங்கைகளுடன்தான் தங்கி இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கான வாழ்வாதாரத்திற்காக மற்ற திருநங்கைகளைப் போல் மக்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தேன். அதில் கிடைத்த பணத்தை வைத்து பெங்களூரில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்’’ என்ற சிந்து கணபதி, தற்போது தென்னக ரயில்வேயில் முதல் திருநங்கை டி.டி.இயாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘‘பாலின மாற்று அறுவை சிகிச்சை எல்லாம் முடிந்து மீண்டும் எனக்கு யாசகம் செய்ய விருப்பமில்லை. அதற்கு ஏதாவது ஒரு வேலை செய்து கவுரவமாக வாழ முடிவு செய்தேன். அந்த சமயத்தில் நான் ஏற்கனவே ரயில்வேயில் வேலைப் பார்த்து வந்ததால், அதே வேலைக்கு முயற்சி செய்து பார்க்கலம் என்று தோன்றியது. ஆனால் நான் பார்த்ததோ அரசு வேலை. அதனை விட்டு ஒன்றரை வருடமாகிறது. மறுபடியும் அந்த வேலைக் கிடைக்குமான்னு எனக்குள் சந்தேகம் எழுந்தது.

அதனால் என் நலன் மேல் அக்கறை கொண்டிருக்கும் SRMU தலைவர் செந்தில்குமார் மற்றும் அதன் செயலாளர் ரபீக் அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் எனக்கு உதவி செய்வதாக கூறியிருந்தனர். 2012ம் ஆண்டு இறுதியில் எனக்கு ரயில்வேயில் நான் முன்பு பார்த்த அதே டெக்னீஷியன் வேலையை வாங்கி கொடுத்தாங்க. இந்த வேலை பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டும். மேலும் நான் ஏற்கனவே பார்த்த வேலை என்பதால் எனக்கு அது கஷ்டமாக இல்லை. ரயில்வேயில் நாம் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான தேர்வு எழுத வேண்டும். நானும் நேரம் கிடைக்கும் போது தேர்வுக்காக என்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். 2020ல் ஒரு விபத்து காரணமாக எனக்கு கையில் அடிபட்டது.

பெரிய அளவில் பிரச்னை எதுவும் இல்லை என்றாலும், என்னால் அதன் பிறகு தொடர்ந்து டெக்னீஷியன் வேலையில் ஈடுபடக் கூடாது என மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனால் எனக்கு ரயில்வே நிர்வாகம் டெக்னீஷியன் அல்லாத மற்றும் அதே கேடரில் உள்ள வேறு வேலையை பரிந்துரை செய்தது. நானும் அந்த வேலைப் பார்த்து வந்தேன். இடையில் ரயில்வேக்கான தேர்வுகளையும் எழுதினேன். அதில் நான் தேர்ச்சிப்பெற்றதால், எனக்கு கிடைத்த வேலைதான் இப்போது பொறுப்பேற்றிருக்கும் டி.டி.இ (டிக்கெட் பரிசோதகர்) வேலை’’ என புன்னகையுடன் பதிலளித்தார்.

‘‘நான் என்னை பெண்ணாக உணர்ந்த போது எனக்கு இதில் பெரிய சங்கடமோ அல்லது பெரிய கவலையோ ஏற்படல. சொல்லப்போனால் யாரும் விரும்பி இதுபோல ஆக மாட்டாங்க. இது அவர்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்களே. இன்னும் குறிப்பிட்டு சொல்லனும் என்றால், நான் பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனக்குள் சிறு சிறு மாற்றங்கள் நடந்திருக்கு. அப்போது பள்ளி விழாக்களில் நடக்கும் நாடகங்கள், நிகழ்ச்சிகளில் நான் பெண் வேடம் தான் அதிகம் போட்டிருக்கேன். சில சமயம் எனக்கு நான் ஒரு ஆண் என்ற உணர்வே வராது. மற்றவர்கள்தான் நீ ஓர் ஆண்பிள்ளை என சொல்லுவாங்க. அப்போது எனக்கு அது என்ன என்று புரியல.

ஆனால் காலப்போக்கில் என்னுடைய மனமும், உடலும் ஒரு பெண்ணுக்குரிய அனைத்து விஷயங்களையும் எனக்கு உணர்த்த ஆரம்பித்தது. நான் ஒரு முழு பெண்ணாக இருப்பதே எனக்கு வசதியாக இருக்கும் என்று நினைத்தேன். அதற்கு நான் சில அறுவை சிகிச்சைகளை செய்ய வேண்டும். அந்த காரணத்தினால்தான் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். என்ன அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்ட போதுதான் நான் ரொம்ப சிரமப்பட்டேன்’’ என்றவர், தான் இழந்த வேலையில் மீண்டும் இணைந்தது பற்றி குறிப்பிட்டார்.

‘‘அரசு வேலையைப் பொறுத்தவரை பொதுவாகவே அதிக நாள் விடுப்பில் இருந்து மீண்டும் வேலையில் சேரும் போது மருத்து ஆய்வுகள் செய்வது வழக்கம். அது எனக்கும் நடந்தது. என்னுடைய நிலை புரிந்து, பெண் பாலினம் அடிப்படையில்தான் திண்டுக்கல் டிவிஷனில் எலக்ட்ரிகல் வேலை கொடுத்தாங்க. ஆரம்பத்தில் பல இடங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும். அந்த சமயத்தில் நான் இருக்கும் நிலையில் இது சாத்தியமா என்று நினைத்தேன்.

நான் நினைத்தது போலவே, நான் வேலைக்காக சென்ற இடத்தில் திருநங்கைகள் சந்தித்த அனைத்து பிரச்னையையும் நான் சந்தித்தேன். இதனால் என்னுடைய பாதுகாப்பினை கருதி நான் தங்குவதற்கு ரயில்வே குடியிருப்பில் வீடு கொடுத்தாங்க. மேலும், அங்கு வசித்தவர்கள் என்னை சக மனுஷியாக நடத்தியது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இதற்கிடையில் தேர்வுகள் எழுதும் போதும் மொழி ரீதியாகவும் பிரச்னைகளை சந்திச்சேன்.

அரசு தேர்வுக்கான கேள்வித்தாள்கள் ஆங்கிலம், இந்தியில் தான் இருக்கும். நான் படித்ததோ தமிழ் இலக்கியம். அதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் படிச்சேன். அதற்கான சிறப்பு வகுப்பு எல்லாம் சென்றேன். என்னுடன் படிக்க வந்தவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்து உதவினாங்க. அவர்களின் உதவியால்தான் நான் தேர்ச்சிப் பெற்றேன். அதில் டிக்கெட் பரிசோதகர், டிக்கெட் கொடுப்பது, கூட்ஸ் சர்வீஸ் மற்றும் பார்சல் சர்வீஸ் என நான்கு பிரிவு வேலைக்கான தேர்வில்தான் நான் தேர்ச்சிப் பெற்றிருந்தேன். டிக்கெட் பரிசோதகர் வேலைக் கிடைத்தால் மக்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று நினைத்தேன்.

நான் விரும்பியது போல் எனக்கு அந்த வேலைக் கிடைத்தது. வேலைக்கான உத்தரவினை கையில் வாங்கிய போது நான் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை. அப்போது எனக்கு ஒரு விஷயம் தான் தோன்றியது. எனக்கு கிடைச்ச இந்த வெற்றி சமூகத்தில் என்னைபோல் இருக்கும் பலருக்கு கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன். இப்போது டி.டி.இயாக வேலைக்கு சேர்ந்து இரு வாரங்கள் கடந்துவிட்டது. கடந்த 20 வருடமாக நல்ல முறையில் வேலையை செய்து, மக்களிடம் எப்படி நல்ல மதிப்பை பெற்றேனோ அதே போல் இனி வரும் காலங்களிலும் செயல்படுவேன். இந்த வேலை மக்களிடையே நேரடியாக பேசுவதற்கும், அவர்களுடன் பழகுவதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பு. என்னை பொறுத்தவரைக்கும் இது ஒரு சவாலான வேலையும் கூட.

பயணிகளின் டிக்கெட்களை பரிசோதனை செய்வது மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியான பதில் சொல்லணும். சில சமயம் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. அப்போதும் சிரிச்ச முகத்தோடு பதில் சொல்லணும். ரயில்வே நிறுவனம், SRMU இயக்கம் எனக்கு ஆதரவும், உதவிகளும் செய்தாலும், எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு என் குடும்பம்தான்.

எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தினால் என் குடும்பத்தினர் தவறான முடிவினை எடுத்திடுவார்கள்னு நினைத்துதான் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். ‘என் பிள்ளைக்கு கண் தெரியாமல், காது கேட்காமல் இருந்தால் நான் கடைசி வரை வச்சு காப்பாத்துவேன். அதே போலதான் இப்போதும். இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது’ன்னு அம்மா சொன்ன வார்த்தைகள் இன்றும் எனக்கு நியாபகம் இருக்கு. அப்பா உயிரோடு இருந்திருந்தால், அவர் தான் எனக்கு முதலில் கைகொடுத்திருப்பார்.

என்னை போன்றவர்களை பெற்றோர்கள் ஒதுக்கி வைக்காமல் ஆதரவு கொடுத்தாலே சமூகமும் எங்களை ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள்தான் அதற்கான முதல் படிகளை எடுக்கணும். எங்களுக்கும் படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போகணும் என்ற எண்ணம் இருக்கு. ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் எங்களுக்கென இடம் ஒதுக்கியிருக்காங்க. அது போல வேலைகளிலும் இடம் அளித்தால், எங்களின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்’’ என வேண்டுகோள் வைத்தார் சிந்து.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post இதில் அவளுடைய தப்பு எதுவும் கிடையாது! appeared first on Dinakaran.

Tags : Kunkum Doshi Sindhu Ganapathy ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி