×

கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா தொடங்கி வைத்தனர்

சென்னை, மார்ச் 7: டிரோன்கள் மூலம் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அமைச்சர், சேகர்பாபு, மேயர் பிரியா தொடங்கி வைத்தனர். சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் டிரோன் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் நிருபர்களிடம் மேயர் பிரியா கூறியதாவது: கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்திற்கு பிறகு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், நீர்நிலைகள், கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்களில் தொடர்ந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் அடிப்படையில் தற்போது கொசு புகை மருந்து அடித்தல், கொசுக்கொல்லி மருந்து தெளித்தல் பணிகள் வீடுவீடாக சென்று தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓட்டேரி நல்லா கால்வாயில் டிரோன் மூலம் கொசு மருந்து தெளித்தல் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பு பணிக்கென 410 மருந்து தெளிப்பான்கள், 109 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 287 ஸ்பிரேயர்கள், 219 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களில் பொருத்தப்பட்ட 68 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு வட்டாரத்திற்கு இரண்டு என 6 டிரோன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டும் 6 டிரோன் இயந்திரங்கள் மூலம் கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மலேரியா பணியாளர்கள் மூலம் வீடுவீடாகச் சென்று கொசுப்புழு வளரிடங்களான, மேல்நிலை, கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருட்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் போன்றவை) ஆகியவற்றை கண்டறிந்து கொசுப் புழுக்கள் இருப்பின் அதனை அழித்திடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரித்திட தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து இதுவரை 18 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் புனிதவதி எத்திராஜன், ரமணி, மாநகர அலுவலர் ஜெகதீசன், தலைமைப் பூச்சித்தடுப்பு அலுவலர் செல்வகுமார், மண்டல அலுவலர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டெங்கு பாதிப்பு குறைந்தது
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 31 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைந்து இதுவரை 18 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

The post கால்வாய்கள், நீர்நிலைகளில் டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Mayor Priya ,Chennai ,Chennai Corporation ,V.K. ,Otteri Nalla Canal ,Nagar Mandal ,Mayor ,Priya ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...