நன்றி குங்குமம் தோழி
இன்று வேலை அதிகமாக இருந்ததால் ஆபீஸிலேயே நேரமாகிவிட்டது. மணி இரவு பத்து. ரேஷ்மா வேறு கத்தப் போகிறாள். சாதாரணமாகவே சந்தேகப்படுபவள்… இன்று என்ன நடக்கப்போகிறதோ என பதட்டம் ராஜூவை தொற்றிக் கொண்டது. ரேஷ்மாவின் சந்தேகத்திலும் நியாமில்லாமல் இல்லை. ராஜுவின் நடவடிக்கைகள் அப்படி.. பெண்களை கண்டால் வழிந்து பேசுவதும், அவர்களை தந்திரமாக பேசி கவிழ்ப்பதும் அவனுக்கு கைவந்தக் கலை. அப்படியிப்படி பேசி வழிந்திருக்கிறானே தவிர பெரியதாக இதுவரை எங்கும் மாட்டியதில்லை… எனவே தில்லாக தன் நடவடிக்கைகளை எவ்வித குற்றவுணர்வுமின்றி தொடர்கிறான்.
‘‘ஏண்டா!.. உனக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே!… அப்புறம் ஏன் இப்படி” என அலுவலக நண்பன் சதீஷ் கேட்க.. ‘‘அதெல்லாம் ஐஸ்ட் ஒரு திரில் மச்சான்… வாழ்க்கையை என்ஜாய் பண்ணி வாழணும்…” ‘‘அதுக்காக இப்படியாடா…” ‘‘எல்லாத்துலையும் ஒரு எக்ஸைட்மென்ட் வேணும் மச்சி… உனக்கெங்க அதெல்லாம் புரியப்போகுது… நீயெல்லாம் சரியான பயந்தாங்குளி பயலாச்சே…” ‘‘ஆமாடா… பயந்தாங்கொள்ளிதான்…மாட்னா என் பொண்டாட்டி என்னை பலி போட்ருவா…” ‘‘மாட்னா தானேடா… மாட்டிக்காம சின்னச்சின்ன தப்பு செய்யுறதுக்கு ஒரு தில் வேணும் மச்சி…” என்றான்.
‘‘விளையாட்டா செய்யுற… ஏதாவது பெரிய பிரச்னையில் மாட்டப்போற… அசிங்கபடப் போறடா…”
‘‘மாட்னா பாத்துக்கலாம்… நான் என்ன கொலையா பண்றேன்… சும்மா ஒரு எண்டர்டெயின்மென்டுக்குதானே…சரி சரி சும்மாவே பயந்து சாகாத… கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்” என சதீஷை கலாய்த்தான். ‘‘யாருங்க அது… ஸ்மித்தா… உங்களுக்கு மெசேஜ் பண்ணியிருக்கா…” என ரேஷ்மா மொபைலை காட்டி கேட்க… ‘‘அதுவா… நம்ம சரவணன் ஒய்ப் மா…எனக்கு தங்கச்சி மாதிரி” என அசடு வழிவான்..இப்படி சமாளிப்பதும் அவனுக்கு வழக்கமான ஒன்றுதான். ரேஷ்மா அப்போதைக்கு சமாதானமானாலும் இவன் மேல் எப்போதும் சந்தேக கண்கொண்டே அலைவாள். ‘‘என்னைக்காவது கையும் களவுமா மாட்டுவ அப்ப வைச்சிக்கிறேன் கச்சேரி உனக்கு” என்பது போல முறைத்துக்கொண்டே நகர்வாள்.
இன்று வேலை எட்டுமணிக்கே முடிந்தது. ஆனாலும் பக்கத்து ப்ராஜக்ட் கனகாவோடு கடலை வறுத்துக் கொண்டே கேன்டீனில் சாப்பிட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. ரேஷ்மாவிடம் வழக்கம் போல எதையாவது புளுகி சமாளிக்க வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டே காரை எடுத்தான். காரில் ரேடியோவை ஆன் செய்து ‘‘நீ நான் ராஜா”… என்ற நிகழ்ச்சியை ரசித்தபடி காரை செலுத்தினான். பாதி தூரம் வந்ததில் கண்ணில் பட்டது அது.. அழகான இளம்பெண்…. தன் ஸ்கூட்டியின் மேல் சாய்ந்தபடி யாருடனோ பதட்டத்துடன் பேசிக்கொண்டிருந்தாள். அனேகமாக வண்டியில் பெட்ரோல் இல்லாமல் இருக்கவேண்டும் அல்லது ரிப்பேராக இருக்க வேண்டும் என யூகம் செய்தவன்…அருகே வந்து காரை நிறுத்தி
கண்ணாடியை இறக்கினான்.
பளிச்சென்று இருந்தாள். பால் வெண்மை நிறம். தனது அலை அலையான கேசத்தை சுதந்திரமாக காற்றில் பறக்கவிட்டிருந்தாள்… அவ்வப்போது போனில் பேசிக்கொண்டே முடியை ஸ்டைலாக கோதியது ஹைக்கூ கவிதை போல இருந்தது. கையில்லாத நவீன ரக ஜாக்கெட்டும்…மெல்லிய டிஷ்யூ புடவையும் அவளின் அழகை மேலும் செழுமையாக காட்டிக்கொண்டிருந்தது. கழுத்தில் மெல்லிய சங்கிலி அதில் ஏதோ வித்தியாசமாக அழகாக மாட்டியிருந்தாள். காலில் முழநீளத்திற்கு பாயிண்டட் ஹீல்ஸ் அவளின் உயரத்தை கூட்டி காட்டியது. கார் கண்ணாடியை திறந்தவன் அசந்து விட்டான். அவளின் ‘பளிச்’ சிரிப்பும் பேச்சும் ஆளை அப்படியே கொத்தாக மயக்கிவிடும் அபாயங்களுண்டு. சாதாரண பெண்களையே விட்டு வைக்க மாட்டான். இவளோ பேரழகி..கார் அவளை தாண்டி இம்மியும் நகர மறுத்து அடம்பிடித்தது.
ஏற்கனவே நேரமாகிவிட்ட நிலையில் சற்றே யோசித்தவன்… அட ரேஷ்மாவை அப்புறம் சமாளித்துக்கொள்ளலாம்…இந்த பேரழகியை விட வேறெதுவும் முக்கியம் இல்லை என்றே தோன்றியது ராஜூவிற்கு. பேசிக்கொண்டிருந்தவள் ‘‘எக்ஸ்யூஸ்மி”… என்ற குரல் கேட்டு திரும்பினாள். ‘‘எனி ஹெல்ப்” என கேட்டுக்கொண்டே காரிலிருந்து இறங்கினான் ராஜு.
‘‘வண்டி பங்சராகிடுச்சி… இந்த நேரத்தில் என்ன பண்றதுன்னு புரியலை… அதான் தெரிஞ்சவருக்கு போன் பண்ணுறேன்”… ‘‘ஓ… மைகாட்… வர்றேன்னாரா?”
‘‘இல்லை… ஹி இஸ் அவுட் ஆப் ஸ்டேஷன்”… என கவலையுடன் சொல்ல… ‘‘அடடா!… வேற யாருக்காவது போன் பண்ணுங்களேன்”… ‘‘அதான் ட்ரை பண்றேன்… பக்கத்துல எங்காவது மெக்கானிக் ஷாப் இருக்கா?” ‘‘இன்னும் கொஞ்சதூரம் போனா வந்துரும்… ஆனா, இந்த இருட்ல எப்படி தனியா வண்டியை தள்ளிகிட்டு போவீங்க…
‘‘அதான் ஒரே யோசனையா இருக்கு…
நான் வேணா வண்டியை தள்ளிகிட்டு வரட்டுமா?”
‘‘உங்களுக்கு ஏங்க வீண் சிரமம்?” ‘‘உங்களை மாதிரி அழகான பெண்ணுக்கு உதவறதுல என்னங்க சிரமம்”…என அசடு வழிந்தான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு… அவள் ஏதேனும் கோபப்படுகிறாளா? என முகத்தை கவனித்தவன்… மாறாக அவள் முகம் வெட்கத்தில் சிவப்பதை கண்டு மேலும் தைரியமானான். ‘‘சரி… நீங்க கூட நடந்துவாங்க போதும்.நானே வண்டியை தள்ளிகிட்டு வர்றேனே” என்று சிரித்தாள். அடடா!.. என்ன ஒரு சிரிப்பு!.. இருட்டிலும் பளீரென மின்னியது அந்த வெண்மை நிற பற்கள்… ஆளை அசத்தும் மாயச்சிரிப்பு… ராஜூவிற்கு ஜிவ்வென பறந்தது மனது. தலையை சிலுப்பி நிதானத்திற்கு வந்தவன் ‘‘சரி வாங்க…” என கூடவே நடந்தான்.
‘‘உங்க பேர்?” என இழுக்க… ‘‘மாயா”… என்றாள். ‘‘ரொம்ப பொருத்தமான பெயருங்க…மாய மோகினி மாதிரிதான் இருக்கீங்க” என இளிக்க…
மறுபடியும் சிரித்தாள்… ‘‘உங்க பேருங்க?”
‘‘ராஜூ…” ‘‘நீங்களும் ராஜா மாதிரிதான் இருக்கீங்க?”என அவள் சொல்லியதும்… ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்து பறந்தது போல் இருந்தது. வண்டியை சிரமப்பட்டு தள்ளியதில் அவளின் புடவை தலைப்பு வெகுவாக சரிந்திருந்தது… ஓரக்கண்ணால் பார்த்து எச்சில் விழுங்கியவனை…
‘‘கொஞ்சம் ஹெல்ப் பண்றது” என சரிந்த புடவையை பார்த்தவளை… தயக்கத்துடன் அவளது புடவையை சரியாக போட முயன்றவனின் கைகள் அவளது உடலை உரசியது எதேச்சையானதா வெண்டுமென்றா என அவனுக்கே புரியவில்லை.. அவள் எதுவுமே நடக்காதது போல ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள்… அவனும் அவளிடம் கடலை வறுத்தபடி வந்தான்… இப்போது கொஞ்சமல்ல நிறையவே தைரியம் வந்துவிட்டது. பேச்சின் இடையில், ‘‘வாழ்க்கைன்னா எதிர்பாராத கிக் வேணும்ங்க…” என்றான் டக்கென. ‘‘அட!… நானும் இப்படித்தான்ங்க…உங்களை மாதிரி தான்ங்க… வாழ்க்கையில் கிக் வேணும்னு நினைப்பேன்… ஐய்யோ…எவ்ளோ ஒற்றுமை நமக்குள்ளே”… என குதூகலித்தாள்.. ‘‘அதாவது இப்ப உங்களை சந்திச்ச மாதிரிங்க”… என வழிந்தான்.
‘‘மீ டூ… என்றவள்… ஆமா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?’’ என்றாள்.
‘‘ச்சேச்சே… இல்லீங்க.. ஐயம் எலிஜிபிள் பேச்சுலர்” என்றான் அவசரமாக…
அவளிடம் கொஞ்சம் எல்லை மீறி வழிந்து பேசிக்கொண்டே வர… ச்சே
அதற்குள் மெக்கானிக் ஷாப் வந்துவிட்டதே என கவலை கொண்டான்.
‘‘ரொம்ப தாங்ஸ்… நீங்க போங்க… நான் பாத்துக்கறேன்” என அவள் சொல்லி விட..
‘‘ரிப்பேர் பண்ணுறவரையாவது நிற்கட்டுமா?” ‘‘இல்லை வேணாம்ங்க.. ஐ கேன் மேனேஜ்”… அதற்கு மேல் ஏதும் சொல்லமுடியாமல் அரை மனதுடன் கிளம்பினான்.
‘‘ச்சே!… கைக்கெட்டியது வாய்க்கு எட்ட வில்லையே” என அலுத்துக்கொண்டே திரும்ப ஓடி வந்து வண்டியை கிளப்பினான்.ஹாலிலேயே தூங்காமல் காத்திருந்தாள் ரேஷ்மா. உள்ளே நுழைந்ததும் பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
‘‘இப்ப மணி என்ன தெரியுமா?” கடிகாரத்தை பார்த்தான் மணி பனிரெண்டு காட்டியது.‘‘இவ்வளவு நேரமா ஆச்சு” என்றாள். என்ன பொய்யை சொல்லுவது என யோசித்தவன், ‘‘உன்கிட்ட சொன்ன மாதிரி பத்து மணிக்கே கிளம்பிட்டேன்மா… வழியில கார் பங்ஸர் ஆகிடுச்சி, ஸ்டெப்னி மாத்திட்டு வர நேரமாகிடுச்சி”… ‘‘உங்களுக்கு மட்டும் எப்படித்தான் அடிக்கடி டயர் பங்சராகுமோ?” என தலையில் அடித்துக் கொண்டு தூங்க போனாள்.. அப்பாடா!… என நிம்மதி பெருமூச்சு விட்டான் ராஜூ. மறுநாள் ‘‘என்ன மச்சி நேத்தைக்கு உடனே கிளம்பிட்டயா?’’ என்ற சதீஷிடம்… ‘‘நானே சொல்லணும்னு நினைச்சேண்டா… நேத்திக்கு செம்ம பிகர் ஒன்னை பாத்தேன்”… என நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்பிக்க…
‘‘டேய்!… இதெல்லாம் தேவையில்லாத ஆணிடா!… வழிப்பறி, திருடுன்னு ஏகப்பட்ட ஏழரையை இழுத்துட்டு வரும் அவ்ளோதான் சொல்லுவேன்”…
‘‘ச்சே!… அவ அந்த மாதிரி கிடையாதுடா… அவளை பாத்தா நீயே உருகிப் போயிருப்ப… மாயா… தேவதை மாதிரி இருந்தா தெரியுமா?”
‘‘அழகு எப்பவுமே ஆபத்துடா… ஜாக்கிரதை”… ‘‘போடா!… எப்பவும் எதையாவது சொல்லி பயமுறுத்திகிட்டு… வாழ்க்கையை அனுபவிக்க கத்துக்கடா… ஐயாவை பாரு”… என காலரை தூக்கி காட்டி கிளம்பியவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டு போனான் சதீஷ்.
ஒரு காலை நேரத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் உலுக்கி எழுப்பினாள் ரேஷ்மா… யாரோ மாயாவிடம் அவன் வழிவதை அட்சரம் பிசகாமல் வீடியோவாக வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார்கள் ரேஷ்மாவிற்கு… யாரிந்த வில்லன் என வந்த கடுப்பை அடக்கிக்கொண்டு… ரேஷ்மாவிடம் என்ன பொய் சொல்வது என யோசித்தவனுக்கு தலை சுற்றியது. ‘‘யாரோ கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்கம்மா..?” ‘‘ஆமா… இவுரு பெரிய அரசியல் தலைவர்… ஆட்சியை கவிழ்க்க கிராபிக்ஸ் பண்ணுறாங்க… தூ” வென துப்பி ‘‘முழுசா பாருய்யா… உன் வண்டவாளம் ஊர் பூரா நாரி கெடக்கு… கல்யாணம் ஆகலையாம்ல… இனி தனியாவே கெடந்து அல்லாடு” என வண்டை வண்டையாக திட்டிவிட்டு சென்றாள் ரேஷ்மா..
முழு வீடியோவையும் ஆன் செய்தான். பிரபல சேனல் ஒன்றில் ‘‘கிக் வேணும் மச்சி ” என்ற தலைப்பில் ப்ராங்க் வீடியோ நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பாகியிருந்தது… மாயாதான் தொகுப்பாளர்… அடிப்பாவி… அப்ப அவ செயின்ல வித்தியாசமா இருந்தது மைக்கா?… என யோசித்தவன் அவனையும் அறியாமல் கத்தினான். கீழே காரை பார்க்கிங்கிலிருந்து எடுக்க போகும்போது பக்கத்து வீட்டு வாண்டு ஒன்று ‘‘கிக் வேணும் மச்சி” என கத்தியபடி சிரித்துவிட்டு ஓடியதை அவமானமாக உணர்ந்தான். ஆபீஸில் நுழையும்போதே காரிடரில் சிலர் இவனை பார்த்தும் பார்க்காத மாதிரி ‘‘வாழ்க்கையில் கிக் வேணும் தெரியுமா?” எனச் சொல்லி சிரித்துக் கொண்டனர். மொபைல் தொடர்ந்து ஒலிக்க… தயங்கி எடுக்க, ஊரிலிருந்து அப்பா… ‘‘என்னடா இதெல்லாம் உங்கம்மா வேற தலையில் அடிச்சிக்கிட்டு அழறா”… என கத்தினார். மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து கோபமாக பாக்கெட்டில் போட்டு வேகமாக நடந்தான்.
எதிரே வந்த சதீஷ்…‘‘என்ன மச்சி கிக் போதுமா?.. இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?” என கிண்டலாக கேட்டான். ‘‘போதும்டா சாமி…” என அழாத குறையாக கையெடுத்து கும்பிட்டான். அடுத்த ஆடு சிக்கும் வரை தனது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக ஓடிக்கொண்டிருந்தது குறித்த பெரும் கவலை பீதியுடன் அவனை சூழ்ந்து கொண்டது.
தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
The post சிறுகதை-கிக் வேணும் மச்சி… appeared first on Dinakaran.