1) ‘‘யார் தண்ணீரின் மலரை அறிகின்றானோ அவன் மலர்களை உடையவனாக, பசுக்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான்’’ எனும் மந்த்ர புஷ்ப வேத பாகம் தைத்திரீய ஆரண்யகத்தின், சூர்ய நமஸ்காரத்தின் இருபத்திரண்டாவது அனுவாகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே சீரடி சாயிநாதரின் சஹஸ்ரநாமத்தில் ‘‘அபாம் புஷ்ப நிபோதகாய நம:’’ எனும் திவ்ய நாமத்தால் பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிஜீ ஸ்ரீ சாயிநாதரைப் போற்றுகிறார். ‘‘தண்ணீரில் பூத்த மலரை (தெய்வீகத்தன்மை) அறிந்தவருக்கு எநமஸ்காரம்’’ என்பது பொருள்.
‘‘அபாம்புஷ்பம்’’ – இது ‘யோபாம் புஷ்ப வேத’ என்னும் மந்த்ர புஷ்ப பகுதியைக் குறிக்கிறது. மந்த்ர புஷ்ப மந்த்ரங்கள் நீரை அனைத்திற்கும் ஆதாரமாகவும் (தாங்கும் பொருள்) ஆதேயமாகவும் (தாங்கப்படும் பொருள்) ஸர்வ தேவதா ஸ்வரூபமுடையதாகவும் உபதேசிக்கின்றன. அத்தகைய புனிதமிக்க நீரில் தோன்றும் ‘தாமரை’ ‘தெய்வீக மலர்’ எனும் சிறப்புடையது. ‘‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’’ என்பர் அப்பர் சுவாமிகள்.
‘‘திருமுகம் கமலம் கிளைவிழி கமலம்
செவ்வாய் கமலம் நித்திலம் கமலம்
வருமுலை கமலம் துணீக்கரம் கமலம்
வலம்புரி உந்தி பொற்கமலம்
பெருகிய அல்குல் மணித்தடம் கமலம்
பிடிநடைத் தாள்களும் கமலம்
உருசுவட்டு அவ்வாறு ஆதலின் அன்றே
உயர்ந்தது பூவினும் கமலம்’’
என அம்பிகையை வர்ணித்து, ‘பூவினுள் உயர்ந்தது கமலம்’ என்று கூறுகிறது தணிகைப் புராணம்.
2) ‘‘தாமரை போன்ற முகத்தவளே, தாமரை போன்ற கால்களை உடையவளே, தாமரை போன்ற கண்களை உடையளே, தாமரையில் தோன்றியவளே, நான் எதனால் வளம் பெறுவனோ அதை எனக்கு நீ அருள்வாய்’’ (ஸ்ரீ சூக்தம்,18)
‘‘தாமரையை விரும்புபவளே, தாமரை மகளே, தாமரையைக் கையில் ஏந்தியவளே, தாமரையில் வீற்றிருப்பவளே, தாமரையிதழ் போன்ற அகன்ற கண்களை உடையவளே, உலகிற்குப்
பிரியமானவளே, விஷ்ணுவின் மனத்திற்கு உகந்தவளே உனது திருவடித் தாமரைகளை என்மீது வைத்தருள்வாய்’’ (ஸ்ரீ சூக்தம், 26) என்று ஸ்ரீ சூக்தம் மஹாலக்ஷ்மி தேவியை வர்ணனை செய்கிறது.
3) இத்தகைய மஹாலக்ஷ்மி தேவியை என்றும் விட்டுப் பிரியாத மஹாவிஷ்ணுவை ‘‘பத்மி (தாமரையைக் கையில் ஏந்தியவர்), பத்மநிபேக்ஷண (தாமரை போன்ற இரு கண்களை உடையவர்) பத்மநாப (தாமரையை தம் நாபியில் உடையவர்) அரவிந்தாக்ஷ (தாமரை போன்ற கண்களை உடையவர்) பத்மகர்ப (உள்ளத் தாமரையில் உபாசிக்கப்படுவர்)’’ என்று விஷ்ணு சஹஸ்ரநாமம் போற்றுகிறது. பேயாழ்வாரும் கண்ணனை, ‘‘கண்ணும் கமலம்; கமலமே கைத்தலமும்; மண் அளந்த பாதமும் மற்று அவையே’’ எனப் போற்றித் துதிப்பர்.
4) ‘‘இமயமலையில் உள்ள பத்ரி க்ஷேத்ரத்தில் சில முனிவர்கள் ஸ்ரீ பத்ரி நாராயணரைப் பிரம்ம கமல மலர்களால் அர்ச்சித்த பொழுது, அம்மலர்கள் பாத வல்லபரின் புனித திருப்பாதங்களில் இங்கே வந்து விழுவதைப் பார்த்திருக்கின்றேன்’’ என்று சாயி அவதாரத்தை முதன்முதலில் உலகிற்கு உணர்த்திய ஸ்ரீ பழநி சுவாமிகள், சங்கரபட் அவர்களுக்கு கூறும் பொழுது பிரம்ம கமலத்தின் மஹிமையைக் கூறுகிறார்:
ஸ்ரீ மஹாவிஷ்ணு சதாசிவரை பிரம்ம கமலம் கொண்டு பூசை செய்தார். மஹாவிஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றியதாகக் கூறப்படும் தாமரை மலரும் பிரம்ம கமலமே. ஸ்ரீ தத்தரை தாமரை மலர் கொண்டு அர்ச்சித்தால் செல்வ வளமும் ஆன்மீக முன்னேற்றமும் கிடைக்கும். தேவலோகத்தில் காணப்படும் பிரம்ம கமலத்திற்கு ஒப்பான மலர்கள் இப்பொழுதும் இமய மலையில் 12000அடி உயரத்தில் காணப்படுகின்றன. அவை வருடத்திற்கு ஒருமுறை ஆவணி மாத பௌர்ணமி அன்று நள்ளிரவில் மலர்கின்றன. அந்த நேரத்தில் தான் அமர்நாத்தில் சிவனின் பனிலிங்கமும் தென்படும். அது மலரும் போது அந்தப் பிரதேசம் முழுதும் ஒரு உன்னத வாசனை பரவும். இந்த அதி உன்னதமான நிகழ்ச்சி இப்பொழுதும் நடைபெறுகிறது. அனைத்து ஆன்மீகத் தேடல் உள்ளவர்களும் இந்தக் காட்சியைக் காண காத்திருக்கின்றனர். தவயோகிகள் இக்கமலத்தைத் தரிசித்து ஆன்மிக நிலையில் உயர்நிலையை அடைகின்றனர். இந்த மலரை யார் யார் தரிசிக்க வேண்டும் என்று ப்ராப்தம் உள்ளதோ அவர்கள் தரிசித்தபின் அவை மறைந்து விடுகின்றன’’ இந்த திவ்ய விஷயம் பாத வல்லப சரிதாம்ருதத்தில் காணப்படுகிறது.
5) ‘‘ஹ்ருதயமானது கீழ்நோக்கிய தாமரை மொட்டுப் போல விளங்குகிறது. அதனுள் அக்னி ஜ்வாலையாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறான் ‘‘இறைவன்’’ என்று நாராயண சூக்தம் கூறுவது இங்கு குறிப்பிடத்தகும். ஹ்ருதயமே உள்ளத்தாமரை, ஹ்ருதய புண்டரீகம் எனப்படும். உள்ளத்தாமரையின் நுண்ணிய வெளிக்குள் நுண்ணிய
வெளியாக இறைவன் இருக்கின்றான்.மனித உடலிலுள்ள ஆறு ஆதாரங்களும் சஹஸ்ராரமும் தாமரைகளாகவே குறிக்கப் பெறுகின்றன. மூலாதாரம் 4 இதழ் தாமரை, சுவாதிடஷ்டானம் 6 இதழ் தாமரை, மணிபூரகம் 10 இதழ் தாமரை, அனாகதம் 12 இதழ் தாமரை,விசுத்தி 16 இதழ் தாமரை,ஆஞ்ஞை 2 இதழ் தாமரை, பிரமரந்திரத்தில் 1000 இதழ்களுடன் கூடிய சஹஸ்ரார தாமரை மேல் பராசக்தியுடன் பரமசிவன்
எழுந்தருளியிருப்பர்.
6) ‘‘தாமரைக் கணக்கு’’ வடமொழியில் ‘பத்மம்’ எனப்படும். அதாவது கோடியினால் பெருக்கிய கோடி, கோடா கோடி, நூறுலட்சம் கோடி, 1 க்குப்பின் 14 பூஜ்யங்கள் கொண்டது இந்த எண்.
தாமரையை மலராகவும், எண்ணுப் பெயராகவும், உவமையாகவும் ஒரு பாடலில் கூறுகின்றார் கம்பர்:
தாமரைத் தலைய வாளி
தாமரைக் கணக்கின் சார்ந்த
தாம்வரத் துரந்து முந்தி
தசமுகன் தனயன் ஆர்த்தான்
தாமரைத் தலைய வாளி
தாமரைக் கணக்கின் சார்ந்து
தாம்வரத் தடுத்து வீழ்த்தான்
தாமரைக் கண்ணன் தம்பி
(கம்ப.8112).
பத்து முகங்களைக் கொண்ட இராவணனின் மகன் இந்திரஜித் தாமரை மொட்டு போன்ற முனையை உடைய அம்புகளை (நாளீகாஸ்த்ரம்- மொட்டம்பு) தாமரைக் கணக்கில் (பதுமம்) வில்லில் இருந்து தொடுத்தான். அத்தகைய அம்புகளை தாமரை போன்ற கண்களையுடைய இராமன் தம்பி இலக்குவன் தடுத்து வீழ்த்தினான். இப்பாடலில் இந்திரஜித் அம்புகளை தாம்வரத் துரந்தான், இலக்குவன் அந்த அம்புகளைத் தாம்வரத் தடுத்து வீழ்த்தினான் என்பது கவிநயம்.
தாமரை மொட்டு, தாமரைமலர் போன்ற கண்கள் (உவமை), தாமரைக் கணக்கு (எண்ணுப் பெயர்) என்னும் மூன்று வகைகளில் தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
7) காலையில் மலர்ந்து மாலையில் குவியும் தாமரை மலரில், அதன் உட்பகுதியில் சிறு வெம்மை (வெப்பம்) இருக்கும். இதனை, குறுந்தொகை (376) ‘‘பனியே வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை’’ என்று கூறும். அதாவது, ‘சூரியனுடைய கதிர்களை வாங்கி வெயிலை (வெப்பத்தை) உட்பொதிந்து வைத்திருக்கும் தாமரை’ என்று கூறுகிறது.
வெளியே வெப்பம் எவ்வளவு இருந்தாலும் அல்லது பனிக்காலமாக இருந்தாலும் தாமரை இதழ்களுக்குள் இருக்கும் வெப்பம் எப்பொழுதும் 30-35 செல்சியஸ் அளவுக்குள்தான் இருக்கும்.இவ்வாராய்ச்சி முதன்முதலில் 1980களில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு (Adelaide) பல்கலைக்கழகத்தில் உடற்கூறு இயல் விஞ்ஞானிகள் டாக்டர். ரோஜர் மற்றும் டாக்டர். பால் மோடல் எனும் இருவரால் ஆராயப்பட்டு British ன் ‘Nature’ பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. ‘‘எப்படி அந்த வெப்பத்தை (30-35C) தாமரை இதழ்கள் தக்க வைத்துக் கொள்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது’’ என்கின்றார் டாக்டர். மோடல்.
நாற்பது தாமரை மலர்களின் வெப்பத்தைக் கொண்டு ஒரு குழல் விளக்கை எரியச் செய்யலாம். ஓய்வில் இருக்கும் ஒரு மனித உடலின் வெப்ப சக்தியை எழுபது தாமரை மலர்களைக் கொண்டு உருவாக்கலாம். வெப்ப இரத்த பிராணிகள் தங்களின் நரம்பு மண்டலத்தைக் கொண்டு, அதன் மூலமாக வெளி வெப்பத்திற்கு ஏற்ப உடலின் வெப்ப நிலையை சீர் செய்து கொள்ள முடியும். ஆனால், நரம்பு மண்டலம் இல்லாத, இதழ்கள் மட்டுமே உடைய தாமரை எவ்வாறு வெப்பத்தை தக்க வைத்துக் கொள்கிறது என்பது இன்னும் வியப்பிலும் வியப்பே.
8) குளிர்ந்த நீரில் மலரும் குளிர்ந்த மலரான தாமரையினுள் வெப்பம் உள்ளதைப் போல் கண்களும் குளிர்ச்சியும் வெப்பமும் உடையன. அருள் எனும் குளிர்ச்சியும், ஞானம் எனும் வெம்மையும் தருகின்ற கண்கள் பாபாவின் கண்கள். ‘‘நீருறு தீயே’’ என்பது திருவாசகம். இங்கு நீர் என்பது அருளையும், தீ என்பது ஞானத்தையும் குறிக்கும். எனவே, பூஜ்ய நரசிம்ம ஸ்வாமிஜீ, சீரடி சாயி சஹஸ்ரநாமத்தில் ‘‘ஓம் அரவிந்த தலாக்ஷாய நம:’’ என்ற நாமத்தால் ‘தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவருக்கு நமஸ்காரம்’ என்று குறிப்பிடுகின்றார்.
பிற உயிர்களாலும் விலங்குகளாலும் பறவைகளாலும் தன்னாலும் வருகின்ற துயரங்களாகிய ‘ஆதி ஆத்மிகம்’, ஐம்பூதங்களால் விளைகின்ற துயரங்களான ‘ஆதி பௌதிகம்’, பிறப்பிலும் இறப்பிலும் நேர்கின்ற துயரங்களாகிய ‘ஆதி தெய்விகம்’ என்ற தாபத்ரயங்களால் (மூன்று வெப்பங்களால்) தவிக்கும் பக்தர்களை அருளால் குளிர்வித்தும், ஸம்சாரக் கடலின் குளிரால் நடுங்கும் அவர்களை ஞானாக்னியின் வெப்பத்தால் இதம் செய்தும் அருள்கின்றார் நம் சாயிநாதர். சீரடி சாயிநாதரின் தாமரைத் திருவடிகளை, தாமரை மலர்களால் அர்ச்சித்து அருளும் ஞானமும் பெறுவோமாக.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post ‘‘கண்ணும் கமலம் கமலமே கைத்தலம்’’ appeared first on Dinakaran.