×
Saravana Stores

ஆன்லைன் வேலையில் கமிஷன் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது: ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

ஆவடி: ஆன்லைன் வேலையில் கமிஷன் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அபிதா (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டெலிகிராம் செல்போன் செயலியில் வந்த ஒரு லிங்கில் பார்ட் டைம் ஜாப் ஆபர் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அதனைப் பார்த்து, அந்த லிங்க்கை தொடர்பு கொண்டபோது, நாங்கள் கொடுக்கும் டாஸ்க் முடித்தவுடன் அதற்கேற்ப கமிசன் தொகை வரும் என எதிர்முனையில் பேசியவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி செயல்பட்ட அபிதாவின் வங்கி கணக்கிற்கு சிறு தொகை வந்துள்ளது. பின்னர் ரேட்டிங் கமிசன் தொகையைப் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு மேலும் பணத்தை அனுப்ப வேண்டும் என மோசடி கும்பல் கூறியுள்ளது. அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு கடந்த ஒரு வருடமாக அபிதா சிறுகச் சிறுக ரூ.35 லட்சத்தை அனுப்பி உள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் அபிதாவுக்கு கமிசன் தொகையை தராமல் காலம் தாழ்த்தினர். மேலும் தனது பணமும் வராததால் தன்னை அந்த கும்பல் ஏமாற்றியது அபிதாவுக்கு தெரியவந்தது.

இதேபோன்று காட்டுப்பாக்கத்தைச் சேர்நத ஜூட் சுசில் அல்போன்ஸ் (36) என்பவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் டெலிகிராம் ஆப்-ல் இதேபோன்று ஒரு செய்தி வந்துள்ளது. அந்த லிங்க்கை தொடர்பு கொண்ட போது மோசடிக்காரர்கள் ‘கெவின் டாட் காம்’ என்ற கம்பெனியின் பெயரில் டாஸ்க்கை முடிக்க கூறினர். ஒவ்வொரு டாஸ்க் முடித்தவுடன் அதற்கேற்ப கமிஷன் தொகை வரும் என கூறியுள்ளனர்.

பின்னர் அபிதாவிடம் கூறியதுபோன்று குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்ப வேண்டும் என கூறியதால், அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாம சுமார் ரூ.20 லட்சத்தை ஜூட் சுசில் அல்போன்ஸ் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த கும்பல் தனக்கு கமிசன் தொகையையும் தராமல், தன்னை ஏமாற்றி தனது பணத்தையும் மோசடி செய்துள்ளதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள நபர்களின் வங்கி கணக்குகள் மூலமாக மணிகண்டன் (33) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திரிச்சூரைச் சேர்ந்த அலிஜாசிம் (39) என்பவர் இந்த மோசடி கும்பலுக்கு உடந்தையாக செயல்படுவதை அறிந்த ஆவடி சைபர் கிரைம் போலீசார் கேரளாவுக்குச் சென்று அலிஜாசிமையும் கைது செய்து ஆவடிக்கு அழைத்து வந்தனர். கைதான இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் நாடு முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்த பல நபர்களை இந்த மோசடி கும்பல் ஏமாற்றி பல கோடி ரூபாயை சுருட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.

The post ஆன்லைன் வேலையில் கமிஷன் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது: ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Avadi E-Crime Police ,Abitha ,Avadi Housing Board ,Avadi e-commerce ,branch ,Dinakaran ,
× RELATED தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...