×

₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு 10 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு மாநிலம் முழுவதும் 100 பேர் தகுதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில்

வேலூர், மார்ச் 5: தமிழக அரசின் அண்ணா தலைமைத்துவ விருது பெற வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 10 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட மாநிலம் 100 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தங்கள் சொந்த முயற்சியால் அரசின் எவ்வித நிதியுதவியும் இன்றி தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், கணினி, டிஜிட்டல் போர்டு என நவீன வசதிகளுடன், சிறந்த கற்றல், கற்பித்தலுடன் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக மாற்றியுள்ளனர். இவர்களின் இந்த பணியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தலைமை ஆசிரியர்களை அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்து பாராட்டு சான்றிதழும், கேடயமும் வழங்குவதுடன், தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் ₹10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு அடுத்த வசந்தநடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.கோபிநாத், லத்தேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.எக்ஸ்.ஜெயசீலி கிறிஸ்டி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளி ரமேஷ்பாபு, காவேரிப்பாக்கம் தெற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வி.கோதை, திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளி கே.பேபி, ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆர்.இந்திரா, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கரிக்காத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆர்.பாஸ்கர், பெரியகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி எஸ்.மீனாட்சிசுந்தரம், செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி எம்.உமாமகேஸ்வரி, திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை என்.அமுதமொழி என 4 மாவட்டங்களில் 10 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட 100 தலைமை ஆசிரியர்கள் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாளை 6ம் தேதி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பாராட்டுச்சான்றிதழ், கேடயம் மற்றும் பள்ளிக்கான ஊக்கத்தொகை ₹10 லட்சத்தை வழங்குகிறார். இவ்விழாவில் கலந்து கொள்ள வரும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர் 3 பேர் என 4 பேர் விழா நடைபெறும் கலையரங்குக்கு காலை 8 மணியளவில் வந்து சேரும் வகையில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post ₹10 லட்சம் ஊக்கத்தொகையுடன் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு 10 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு மாநிலம் முழுவதும் 100 பேர் தகுதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipet ,Tirupattur ,Tiruvannamalai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...