×

பஞ்சதேகமூர்த்தி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சிவபெருமானைச் சதாசிவலிங்கமாகப் போற்றும்போது அந்த லிங்கத்தின் பாணத்தில் நான்கு திக்குகளிலும் நான்கு முகங்களையும் மேலே உள்ள வட்டப் பகுதியை ஒரு முகமாகக் கற்பனை வடிவில் கொண்டும் போற்றுவர். ஐந்து முகங்களையும் முறையே தத்புருடம், அகோரம், சத்தியோ ஜாதம், வாமதேவம், ஈசானம் என ஆகமங்கள் குறிக்கும். திருமூலர் திருமந்திரத்தின் ஏழாம் தந்திரத்தில் சதாசிவலிங்கம் பற்றிக் கூறும்போது,

`சத்திதான் நிற்கின்ற ஐமுகஞ் சாற்றிடில்
உத்தரம் வாமம் உறைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புருடன்னுரை
தெற்கி லகோரம் வடகிழக் கீசனே’
– என்று உரைத்துள்ளார்.

கிழக்குத் திசையில் தத்புருஷமுகமும், தெற்கில் அகோரமுகமும், மேற்கில் சத்தியோஜாத முகமும், வடக்கில் வாமதேவ முகமும், வடகிழக்கில் ஈசான முகமும் திகழுமாறு சதாசிவலிங்கத்தினைப் போற்றுவர். திருவானைக்கா, திருவதிகை, திருவண்ணாமலை போன்ற பல தலங்களில் சதாசிவலிங்க வடிவத்தினை நாம் தரிசிக்கலாம். அங்கெல்லாம் நான்கு திக்குகளில் நான்கு முகங்களும், உச்சியில் ஒரு கற்பனை முகமும் திகழும்.

தஞ்சைப் பெரிய கோயில் எனப்பெறும் இராஜராஜேச்சரத்தின் ஸ்ரீவிமானம் தட்சிணமேரு என அழைக்கப்பெறும். இவ்விமானம் பல தத்துவங்களை உள்ளடக்கியகட்டுமானத்தைக் கொண்டதாகும். அதில் ஒரு தத்துவமாக ஸ்ரீவிமானமே சதாசிவ லிங்கம் என்ற வடிவில் உருவாக்கப்பெற்றுள்ளது. இதனை வலியுறுத்தும் வண்ணம் ஸ்ரீ விமானத்தின்கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகிய ஐந்து திசைகளில் ஐந்து மாடங்களை (கோஷ்டங்களை) அமைத்து அதில் சிவனாரின் முழு உருவத் திருமேனிகளைப் பிரதிட்டை செய்துள்ளனர்.

கிழக்குத்திசை மாடத்தில் மாதுளங் கனியையும் அக்கமாலையும் கைகளில் ஏந்தியவராய் பின்னிரு கரங்களில் மான் மழு தரித்தவராய் தத்புருஷமூர்த்தி நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றார். தென்திசை மாடத்தில் அகோரமூர்த்தி மீசையுடன், எட்டுக் கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் திகழ்கின்றார். ஸ்ரீ விமானத்தின் மேற்குத்திசை கோஷ்டத்தில் பின்னிரு கரங்களில் மான் மழு ஏந்தி நிற்க முன்னிரு கரங்களில் மான் மழு ஏந்தி நிற்க முன்னிரு கரங்களால் அபயவரதம் காட்டி நின்ற கோலத்தில் சத்தியோஜாதமூர்த்தி காணப் பெறுகின்றார். இதே விமானத்தின் வடபுற கோஷ்டமொன்றில் வாமதேவமூர்த்தி காணப்பெறுகின்றார். மேலிரு கரங்களில் மானும் மழுவும் விளங்க முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியவராய் நின்ற கோலத்தில் அவர் கோலம் காணப்பெறுகின்றது.

ஸ்ரீவிமானத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கோஷ்டத்தில் ஈசான மூர்த்தியின் திருமேனி நின்ற கோலத்தில் காணப்பெறுகின்றது. இம்மூர்த்தி இரண்டு கரங்களுடன் மட்டும் காணப்பெறுகின்றார். வலக்கரத்தில் நீண்ட திரிசூலம் உள்ளது. இடக்கரமோ தொடைமீது இருத்திய நிலையில் உள்ளது. இத்திருக்கோயிலில் காணப்பெறும் இராஜராஜசோழனின் கல்வெட்டுச் சாசனமொன்றில் அப்பேரரசன் இக்கோயிலுக்கென அளித்த பஞ்சதேகமூர்த்தி என்ற செப்புத் திருமேனி பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

‘‘ஸ்வஸ்திஸ்ரீ உடையார்  ஸ்ரீ ராஜராஜதேவர் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார் கோயிலில் யாண்டு இருபத்தொன்பதாவது வரை எழுந்தருளுவித்த செப்புத் திருமேனி. உடையார்கோயிலில் முழத்தால் அளந்து கல்லில் வெட்டின பஞ்சதேக மூர்த்திகளில் பாதாதி கேசாந்தம் இருபத்திருவிரலே நான்கு தோரை உசரத்து பத்து ஸ்ரீஹஸ்தம் உடையாராகக் கனமாக எழுந்தருளுவித்த திருமேனி ஒருவர். இவரோடுகூட நாலு முகத்திலும் பாதாதி கேசாந்தம் பதினால் விரல் உசரத்து நந்நாலு ஸ்ரீஹஸ்தங்கள் உடையர்களாக கனமாக எழுந்தருளிவித்த திருமேனி நாலு. இவர் எழுந்தருளி நின்ற மூவிரலேய் நான்கு தோரை சமசதுரத்து பத்மபீடம் ஒன்று’’ என்பதே அக்கல்வெட்டு வாசகமாகும்.

காலவெள்ளத்தில் அரிய பஞ்சதேகமூர்த்தி செப்புத் திருமேனி இவ்வாலயத்திலிருந்து மறைந்தபோதிலும் கல்வெட்டு வாசக அடிப்படையில் அத்திருமேனியின் உருவ அமைதியை வரைபடமாகக் காண இயலுகின்றது. இத்தகையதொரு சதாசிவப் பெருமானின் பஞ்சதேகங்களுடன் உள்ள வடிவம் உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

இதுபோன்றே சிவனாரின் ஐந்து முகங்களை சிவலிங்கங்களில் நாம் காண இயன்றாலும், அம்மூர்த்திகளின் முழு உருவத் திருமேனிகளை வேறு எங்கும் நாம் காண இயலாமல் தஞ்சைக் கோயிலில் மட்டுமே இன்றளவும் நாம் காணமுடிகின்றது. திருஞானசம்பந்தர் திருவாஞ்சிய பதிகத்தில் ‘‘உடல் அஞ்சினர்’’ எனக் குறிப்பதும், திருநாவுக்கரசர் திருவதிகைப் பதிகத்தில் ‘‘அஞ்சினால் பொலிந்த சென்னி’’ எனக் குறிப்பதும் இத்திருவடிவங்களைத்தாம்.

சதாசிவலிங்கமாக, தூலலிங்கமாக, மகாலிங்கமாகத் திகழும் தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்தைக் காத்து நிற்கும் துவாரபாலகர் பத்துப்பேர்களும் தசாயுத புருடர்களே. சிவனார்க்குரிய சக்தி, சூலம், மழு, வாள், துவஜம், கதை, சக்கரம், அங்குசம், பாசம், வஜ்ரம் எனும் பத்து ஆயுதங்களையும் அந்தந்த ஆயுத புருடர்கள் தாங்கி ஸ்ரீ விமானத்தின் ஐந்து வாயில்களிலும்
வாயிலுக்கு இருவர் எனக் காத்து நிற்பதும் இக்கோயிலில் மட்டுமே. அவ்வாயுத புருடர்களில் சக்தி, சூலம், மழு, வாள், துவஜம் என்னும் ஐந்து தேவர்களின் வடிவங்கள் மட்டும் தற்போது சிதைவுபெறாமல் அப்படியே உள்ளன. மற்ற புருடர்களான கதை, சக்கரம், அங்குசம், பாசம், வஜ்ரம் ஆகியோர் சிற்பங்கள் பிற்காலத்திய தாக்குதல்களினால் சிதைவுபெற்று பின்பு வந்தோர் செய்த திருப்பணி களால், அந்த அந்த ஆயுதங்களை இடம்பெறாமல் செய்துவிட்டனர்.

இக்கோயிலின் தூண் ஒன்றில் காணப்பெறும் கல்வெட்டு ஒன்றில் பஞ்ச ஆயுத மூர்த்திகளின் செப்புப் பிரதிமம் பற்றிக் குறிப்பிடுகின்றது. அண்மையில் திருப்புகலூர் சிவாலயத்தில் புதையுண்டு வெளிப்பட்ட செப்புத் திருமேனிகள் வரிசையில் தசாயுதமூர்த்திகள் பதின்மர் உருவங்களும் கிடைத்துள்ளன. அவை யாவும் இராஜராஜ சோழன் காலத்துத்திற்குரியவையாகும்.

இத்தகைய திருமேனிகள் போன்று மேலும் ஓர் அரிய செப்புத் திருமேனி பற்றி தஞ்சைக் கோயில் கல்வெட்டு விவரிக்கின்றது. தட்சிணமேரு என மேரு மலையாகவே இக்கோயிலின் ஸ்ரீவிமானம் சுட்டப்பெறுகின்றது. எனவே, மேருமலையில் வீற்றிருக்கும் சிவனாரின் வடிவத்தைக் காட்ட மாமன்னன் இராஜராஜனின் சிற்பிகள் மகாமேரு விடங்கர் என்ற பெயரில் ஒரு திருமேனியை
வடித்துள்ளனர்.

மூன்று சிகரங்களுடன் மகாமேரு மலை திகழ உச்சியில் சூரிய சந்திரர் ஆகியோருடன் மத்தியில் விருட்சம் ஒன்று இடம்பெற்றுத் திகழ்ந்தது. அதன்கீழ் ஆசனத்தில் சிவபெருமானும் உமையும் அமர்ந்திருக்க தேவியின் அருகில் குறளிப்பெண் (சேடிப் பெண்) ஒருத்தி காணப்பெற்றாள்.கணபதியார் ஒருபுறம் நிற்க,இடபம் ஒருபுறம் படுத்திருக்க, குழந்தை முருகன் செடி ஒன்றின் அருகில் நிற்கும்வண்ணம் அத்தொகுதி வடிக்கப் பெற்றிருந்துள்ளது. கல்வெட்டு விவரிக்கும் இப்படைப்பும் காலவெள்ளத்தில் மறைந்தாலும் அதுபற்றிய செய்தி கல்வெட்டின் வாயிலாக நிலைபெற்றுள்ளது.

The post பஞ்சதேகமூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Panchathekamurthy ,Kumkum ,Anmikam ,Mudhunavail Balasubramanian ,Lord Shiva ,Sathasivalingam ,Gudavai ,Tatpurudam ,
× RELATED முகச்சுருக்கம் மறைந்து இளமையான தோற்றம் பெற!