×

திமுக ஆட்சியை உருவாக்கியது சிறுபான்மை சமூக மக்கள்தான்

திருச்சி, மார்ச் 4: திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரமாண்ட நுழைவாயில், முதல்வர் தே.சுவாமிராஜ் வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தேர்வு நெறியாளர் அலுவலகம், தகவல் தொழில் நுட்பத்துடன் கூடிய வகுப்பறை வளாகம், புதிய கூடைப்பந்து மைதானம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கல்லூரி அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமண்டல- பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி பேராயர் ரோசலிண்ட் சந்திரசேகரன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் பிரின்சி மெர்லின் வரவேற்றார். விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியதாவது: தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பிஷப் ஹீபர் கல்லூரி மேலும் மேலும் பல புகழ் அடைய வேண்டும். கல்லூரி புகழ் அடைவதோடு இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளிம்பு நிலையில் உள்ள நடுத்தர மக்கள் அவர்களை முன்னேற்றுவதற்கு சரியான ஒரு இடமாக இந்த கல்லூரி திகழ்கிறது.

விளையாட்டுதுறை அமைச்சரை வைத்து இந்த கட்டிடங்களை திறந்து வைக்க நினைத்தோம். ஆனால் முடியவில்லை. அவர் இந்த கல்லூரி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருவார். சிறுபான்மை மக்களுக்காக முன்னின்று செயல் ஆற்றியவர் கலைஞர் கருணாநிதி. தற்போது உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே வழியில் நின்று செயல் ஆற்றுபவர். இதில் ஒரு சுயநலம் இருக்கிறது. சிறுபான்மை மக்களிடம் பேசும்போது கிறிஸ்தவராக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி தேர்தலில் நின்றால் மட்டும் போதும். உங்கள் ஓட்டு எங்களுக்கு கிடைத்து விடும். இந்த ஆட்சியை உருவாக்கியது சிறுபான்மை மக்கள் தான் என்பதை நாங்கள் மறக்கவில்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

திருச்சி -தஞ்சை மண்டலப் பேராயரும், கல்லூரிச்செயலரும், ஆட்சிமன்றக் குழுத்தலைவருமாகிய சந்திரசேகரன் பேசுகையில், நலிவடைந்த பிரிவினர் தங்களது சொந்த வழியில் வளர்வதற்கு வசதியாக இருக்கின்ற நிலையை நமது பிஷப் ஹீபர் கல்லூரி ஏற்படுத்தி உள்ளது. நமது தமிழக அரசு உயர் கல்வி வழங்குவதில் இந்திய ஒன்றியத்தின் முதன்மை அரசாக திகழ்கிறது. இதில் அதிகமான பட்டதாரிகள் பயிலும் மாநிலமாக திகழ்கிறது. நமது தமிழ்நாட்டை உயர்த்திய பெருமை நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையே சாரும் என்று பேசினார்.

கல்லூரியின் முன்னாள் முதல்வரும், இயக்குனருமான சுவாமிராஜ், கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் மாணவரும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கழக உறுப்பினர் செயலாளருமான சந்திரமோகன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், மேயர் அன்பழகன், திருச்சி-தஞ்சை மண்டல முன்னாள் பேராயர் மற்றும் முன்னாள் செயலர் ஜேம்ஸ் சீனிவாசன், திருச்சி -தஞ்சாவூர் மண்டல திருச்சி மறை மாவட்டத் தலைவர் சுதர்சன், ஆயர்கள், நிறுவனத் தலைவர்கள், பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர்கள், நிதியாளர், தேர்வு நெறியாளர், புல முதன்மையாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதைத்தொடர்ந்து கல்லூரியின் நுழைவாயிலையும், பல்வேறு வளாகங்களையும் வடிவமைத்த ஜேசிடி, கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் ஜெயராஜ், கட்டிடக்கலை நுட்ப வல்லுநர் ரமணன் ஆகியோருக்கும், கல்லூரியின் முன்னாள் முதல்வர் பால் தயாபரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சர்வதேச மற்றும் மத்திய, மாநில அளவில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் தேசிய அளவில் விருது பெற்ற திருச்சி-தஞ்சை மண்டலத்திலுள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஞானசுசீகரன் மற்றும் பள்ளி ஆசிரியர் பியூலா மற்றும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.

The post திமுக ஆட்சியை உருவாக்கியது சிறுபான்மை சமூக மக்கள்தான் appeared first on Dinakaran.

Tags : DMK ,Trichy ,Bishop Heber College ,Chief Minister ,T. ,Swamiraj Campus ,Dinakaran ,
× RELATED இக்கட்டான காலக்கட்டங்களில் கலைஞரிடம்...