×

கிருஷ்ணகிரி நகராட்சியில் ₹13.77 கோடி வரி பாக்கி

கிருஷ்ணகிரி, மார்ச் 4: கிருஷ்ணகிரி நகராட்சியில் ₹13.77 வரிபாக்கி உள்ளதை, இம்மாத இறுதிக்குள் வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கடந்த 1965ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாகவும், கடந்த 1975ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி 2ம் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி முதல் நிலை நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குத்துறை நாள் 6.3.2019ன் படி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகராட்சி 11.50 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது. நகராட்சி பகுதியில் தற்போதைய நிலவரப்படி சுமார் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி, போகனப்பள்ளி (பகுதி), கட்டிகானப்பள்ளி (பகுதி) என மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடங்கியதாக உள்ளது.

மொத்தம் 33 வார்டுகள் கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில், சிறியதும், பெரியதுமான ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், சினிமா தியேட்டர்கள், நகை கடைகள், ஜவுளி கடைகள், திருமண மண்டபங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், அரசு அலுவலர் குடியிருப்பு, போலீஸ் குடியிருப்புகளும் உள்ளன. இவற்றிற்கு நகராட்சி நிர்வாகம் மூலம், குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அத்துடன் நகரின் பெரும்பாலான வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகரின் வளர்ச்சி திட்ட பணிகள், பராமரிப்பு பணிகள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு, நகராட்சி வருவாயில் இருந்து தான் செலவிடப்பட்டு வருகிறது. ஆனால், வரிகள் உரிய முறையில் செலுத்தாததால், நகராட்சி நிர்வாகம் தற்போது ஸ்தம்பித்துள்ளது.

குறிப்பாக இந்நகராட்சியில் சொத்து வரி ₹3 கோடியே ஒரு லட்சத்து 99ஆயிரம், காலிமனை வரி ₹4.32 லட்சம், தொழில் வரி ₹35.83 லட்சம், குடிநீர் கட்டணம் ₹2 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரம், குத்தகை, கடைகள் வாடகை பாக்கி ₹5 கோடியே 40 லட்சத்து 43 ஆயிரம், பயனீட்டாளர் கட்டணம் ₹67.57 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் ₹1 கோடியே 48 லட்சத்து 98 ஆயிரம் என மொத்தம் ₹13 கோடியே 76 லட்சத்து 74 ஆயிரம் வரி பாக்கி உள்ளது. இந்த வரிபாக்கியை இம்மாத இறுதிக்குள் வசூலிக்க, நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.குறிப்பாக வரிபாக்கி அதிகம் உள்ள நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், நகராட்சி வணிக நிறுவனத்தில் கடை வைத்துள்ள வணிகர்களின் கடைகளுக்கு, தற்போது சீல் வைக்கும் பணி துவங்கியுள்ளது. மேலும், நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, வரிவசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கியை உடனடியாக செலுத்தி, நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post கிருஷ்ணகிரி நகராட்சியில் ₹13.77 கோடி வரி பாக்கி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Municipality ,Krishnagiri ,
× RELATED நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி