திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்தி பெற்ற லூர்து ஆலயம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு சென்ற மலையாள நடிகரும், பாஜ முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான சுரேஷ் கோபி, லூர்து மாதாவுக்கு தங்கக் கிரீடம் வழங்க விரும்புவதாக கூறினார். அதற்கு ஆலய நிர்வாகிகளும் சம்மதித்தனர். இதன்படி கடந்த 3 மாதங்களுக்கு முன் லூர்து ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்ற சுரேஷ் கோபி, தங்கக் கிரீடத்தை காணிக்கையாக வழங்கி அதை லூர்து மாதாவின் சிலையில் அணிவித்தார்.
இந்நிலையில் அது தங்கத்தால் ஆன கிரீடம் அல்ல என்றும், செம்பில் தங்க முலாம் பூசப்பட்டது என்றும் புகார் எழுந்துள்ளது. நேற்று இந்த ஆலயத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சூர் மாநகராட்சி கவுன்சிலரான லீலா வர்கீஸ், புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கவுன்சிலர் லீலா வர்கீஸ் கூறியது: லூர்து மாதாவுக்கு பல பவுன் எடையுள்ள தங்கக் கிரீடத்தை சுரேஷ் கோபி வழங்கியதாக தெரியவந்தது. ஆனால் அது உண்மையில் தங்கக் கிரீடம் அல்ல என்றும், செம்பில் தங்க முலாம் பூசப்பட்டது என்றும் பரவலாக அனைவரும் கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில் அந்தக் கிரீடத்தில் எத்தனை பவுன் தங்கம் உள்ளது என்று தெரிந்துகொள்ள அனைவரும் விரும்புகின்றனர். இது குறித்து ஆலய பாதிரியாரிடம் நான் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post தங்கம் என்று கூறி முலாம் பூசிய கிரீடம் வழங்கினாரா நடிகர் சுரேஷ் கோபி appeared first on Dinakaran.