×

அதிமுக- பாஜ போஸ்டர் யுத்தம்

 

புதுச்சேரி, மார்ச் 4: புதுவையில் அதிமுக, பாஜகவுக்கு இடையே பரபரப்பு போஸ்டர் யுத்தத்தால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. ஆளும் கட்சியான தேஜ கூட்டணியில் பாஜவும், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது திமுக மற்றும் அதிமுகவும் போட்டியிடவுள்ளது. இந்நிலையில் புதுவை பாஜவினர் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதில் மறைந்த அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், மற்றும் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்து, வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.  கூட்டணியைவிட்டு வெளியேறிய அதிமுக தொண்டர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கும் தந்திர நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அதிமுக சார்பில் பாஜவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டு, பிரதமர் மோடி பாராட்டி பேசிய வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் எம்ஜிஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான்.

அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக, புதுச்சேரி ஆகிய 40 நாடாளுமன்ற தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பாஜ கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர். புதுவையில் அதிமுக வெற்றியை உறுதி செய்துள்ள பாஜ கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி என குறிப்பிட்டுள்ளனர். பாஜ-அதிமுக கட்சிகள் இடையிலான இந்த போஸ்டர் யுத்தம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அதிமுக- பாஜ போஸ்டர் யுத்தம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJ ,Puducherry ,BJP ,Teja alliance ,Congress ,India ,Baj ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக...