×

கல்விச் செல்வம் மட்டுமே முழுமை அடையச் செய்யும்

பெரம்பலூர்,மார்ச் 3: கல்விச் செல்வம் மட்டுமே ஒருவரை முழுமை அடையச்செய்யும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஎஸ்பி பேசினார். பெரம்பலூர் அருகே கவுள் பாளையம் கிராமத்தில் உள்ள கிறிஸ்டியன் மெட் ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி நடந்த இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி வளவன் பேசியதாவது:
இக்கால சூழ்நிலையில் மனிதர்களுக்கு கல்வி ஒன்றே பிரதான தேவையாக உள்ளது. கல்வி அறிவு இருந்தால் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும், சிறந்த குடும்ப சூழலைக் கொண்ட கட்டமைப்பையும் அமைத்துக் கொள்ள முடியும். சாதி, மத பேதங்களில் இருந்து மக்களை ஒரு மையப் படுத்துவது கல்வி மட்டுமே. எத்தனை செல்வங்கள் இருந்தாலும் கல்விச் செல்வம் மட்டுமே ஒருவரை முழுமை அடையச்செய்யும். கல்வி அறிவு பெற்றவர்கள் தன்னை மட்டுமன்றி தன் னைச் சார்ந்த குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டுக்கும் நல்ல பயன்களை தர முடியும். கல்வியில் சாதித்த மனிதர்களே பின்னாளில் சாதனையாளர்களாக மாறி யுள்ளனர்.

தீண்டாமை, சாதிய பாகு பாடுகள், இரட்டை குவளை முறை, மற்றும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் இல்லாத மனிதாபிமானமிக்க சமூகத்தை உருவாக்க மாணவர்கள்தான் அதற்கான முழு முயற்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த சமூகத்தில் அனைவரும் சமம் என்பதை கல்வி அறிவின் மூலமே உணரமுடியும். குறிப்பாக நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு கிடந்த பெண்கள் தற்போது கல்வி அறிவு பெற்றுள்ளனர்.இதன் மூலம் பெண் அடிமைத் தனம் ஒழிக்கப்பட்டு பெண்ணுரிமை காக்கப்படும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் மாணவிகளிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர், புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கல்விச் செல்வம் மட்டுமே முழுமை அடையச் செய்யும் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,DSP ,Christian Med Rig Higher Secondary School ,Kaulpalayam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி