அண்ணாநகர், மார்ச் 3: சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரும்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் குட்கா விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெபராஜ் தலைமையிலான குழுவினர் அரும்பாக்கம் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, 2 கடைகளில் 500 கிராம் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குட்கா விற்றதாக இந்த கடைகளுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு, எச்சிரிக்கை விடுவித்த நிலையில் மீண்டும் குட்கா விற்பனை செய்ததால் அந்த கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதுகுறித்து உணவுபாதுகாப்புதுறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். அதேபோல் குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு அபராத விதித்து, சீல் வைத்து வருகிறோம். இதனால் மளிகை கடை, டீக்கடை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்தால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தலாம்’’, என்றனர்.
The post குட்கா விற்பனை செய்த 2 மளிகை கடைக்கு சீல் appeared first on Dinakaran.