×

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர்

மரக்காணம், மார்ச் 3: அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. பேருந்தை கல்பாக்கத்தை சேர்ந்த அருணாச்சலம்(45) ஓட்டி வந்தார். வந்தவாசியை சேர்ந்த நாராயணன் நடத்துனராக இருந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி அருகில் நேற்று காலை 11.40 மணியளவில் வந்தபோது பேருந்தின் முன்னால் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன்(25) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். பைக்கில் சென்றவர், திடீரென வலது புறமாக திரும்பி உள்ளார். இதனால் இவர் மீது மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்துள்ளார். இதன் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பைக்கில் சென்றவரின் மீது லேசாக மோதி, சாலை ஓரம் கவிழ்ந்தது.

இதனால் பேருந்தில் வந்த பயணிகள் அலறினர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். விபத்தில் பைக்கில் வந்த சிவச்சந்திரன் மற்றும் பேருந்தில் வந்த வெண்ணாங்குபட்டு பிரியங்கா(30), லட்சுமி(35), புதுச்சேரி இனியா(25), பாலாஜி(60), கடலூர் தேவகி(55) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 40 பயணிகள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Tamil Nadu Government Transport Corporation ,Chennai ,Puducherry ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...