×

கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல் புறக்கணிப்பு மரக்காணம் நடுக்குப்பத்தில் மாலை 3 மணிக்கு ெதாடங்கிய வாக்குப்பதிவு

*அதிகாரிகளின் நீண்டநேர பேச்சுவார்த்தைக்குபின் தீர்வு

மரக்காணம் : மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் பிரசித்திபெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா நடத்துவதில் இரண்டு தரப்பினருக்கு இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பிரச்னை ஏற்பட்டதால் அரசு அதிகாரிகள் கோயில் திருவிழா நடத்த தடை விதித்தனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதையடுத்து நடுக்குப்பம் கிராம மக்கள் திரவுபதி அம்மன் கோயில் திருவிழாவை முறைபடி நடத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலம் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையங்களில் அரசு அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்நிலையில் வைத்திருந்தனர். ஆனால், அங்கு அமைக்கப்பட்டிருந்த 206 மற்றும் 207 ஆகிய வாக்குச்சாவடி மையங்களுக்கு ஒருவரும் வாக்குப்பதிவு செய்யாமல் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகாம் தலைமையில் மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன், மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடுக்குப்பம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது ஊர் மக்கள் 7 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ள கோயில் திருவிழாவை அடுத்த மாதம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரிகள் நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுங்கள். தேர்தல் முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி கோயில் திருவிழாவை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டு மாலை 3 மணியில் இருந்து அப்பகுதி மக்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 206 வாக்குச்சாவடியில் மொத்தம் 747 வாக்குகள், 207வது வாக்குச்சாவடியில் 625 வாக்குகள் உட்பட மொத்தம் 1372 வாக்குகள் இருந்தது. அப்போது மாலை 6 மணிக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க அதிகாரிகள் டோக்கன் வழங்கி அனுமதி வழங்கினர். இதனால் 206வது வாக்குச்சாவடி மையத்தில் 457 வாக்குகளும், 207வது வாக்குச்சாவடி மையத்தில் 407 வாக்குகள் உள்பட மொத்தம் 864 வாக்குகள் பதிவானது.

The post கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல் புறக்கணிப்பு மரக்காணம் நடுக்குப்பத்தில் மாலை 3 மணிக்கு ெதாடங்கிய வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Marakanam Nadukkuppam ,Marakanam ,Dhraupathi Amman ,Nadukkuppam ,
× RELATED மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி