×

தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 43,051 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 71வது பிறந்தநாளையொட்டி சென்னை தெற்கு மாவட்டத்தில் 14 இடங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் வகையில், சென்னை, காமராஜபுரம் கங்கையம்மன் கோயில் அருகில் நடந்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: வருகிற 4ம் தேதி ரூ.247.50 கோடியில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இது நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் சுற்றியுள்ள மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.17 கோடியிலான மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 3ம் தேதி (இன்று) குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் அளிக்கப்படுகிறது.

போலியோ நோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. யுனிசெப் நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இணைந்து போலியோ சொட்டு மருந்து தரும் நிகழ்வு நடக்கிறது. 5 வயதிற்குட்பட்ட 57,84,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி 100% தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Chief Minister ,M.K.Stal ,Chennai South district ,M.Subramanian ,
× RELATED அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்கு...