×

195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி: 34 ஒன்றிய அமைச்சர்கள், 2 மாஜிக்களுக்கும் வாய்ப்பு; ராஜ்நாத்சிங் அமித்ஷாவுக்கும் இடம்; மபி, திரிபுரா முன்னாள் முதல்வர்களுக்கு வாய்ப்பு; 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை; கூட்டணி இழுபறியால் தமிழ்நாடு பட்டியல் வரவில்லை

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜ கட்சி 195 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை நேற்று வெளியிட்டது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அமித்ஷா, ராஜ்நாத் சிங் உட்பட 34 ஒன்றிய அமைச்சர்கள், 2 மாஜி அமைச்சர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஸ்மிருதி இரானி மீண்டும் அமேதியில் போட்டியிடுகிறார். 2 முன்னாள் முதல்வர்களுக்கு சீட் தரப்பட்ட நிலையில், ஒன்றிய இணை அமைச்சர் 3 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி இழுபறி காரணமாக, முதல் வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதனால், அரசியல் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதில் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை வலுப்படுத்த பாஜ தீவிரமாக பணியாற்றி வந்தது.

இதற்காக கடந்த 29ம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜவின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய 5 மணி நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் கட்சி தலைமையகத்தில் பாஜ தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். இதில், பிரதமர் மோடி மீண்டும் தனது வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ல் குஜராத்தின் வதோதரா, உபியின் வாரணாசியில் போட்டியிட்டு இரு தொகுதியிலும் வென்ற மோடி, வாரணாசி தொகுதியை மட்டும் தக்க வைத்துக் கொண்டார். 2வது முறையாக 2019 தேர்தலிலும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் தற்போது 3வது முறையாக வாரணாசியில் களமிறங்குகிறார். ஒன்றிய அமைச்சர்களான அமித்ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும் ராஜ்நாத் சிங் உபி லக்னோ தொகுதியிலும், ஸ்மிருதி இரானி உபி அமேதி தொகுதியிலும் களமிறங்குகின்றனர். 2019ல் ஸ்மிருதி இரானி அமேதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இம்முறையும் அவருக்கு அமேதி தொகுதி தரப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 34 ஒன்றிய அமைச்சர்களுக்கு மீண்டும் சீட் தரப்பட்டுள்ளது. இதில் சிலர் மாநிலங்களவை எம்பியாக இருந்த நிலையில், மக்களவையில் களமிறக்கப்பட உள்ளனர். மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய சுகாதார அமைச்சரான மன்சுக் மாண்டவியா இம்முறை குஜராத்தின் போர்பந்தர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதே போல, மாநிலங்களவை எம்பியாக இருந்த ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரம் தொகுதியில் களமிறக்கப்படுகிறார். இத்தொகுதி காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூரின் சொந்த தொகுதியாகும். கேரளாவின் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார்.

காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தவரான ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மத்தியபிரசேத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார். 2002 வரை இத்தொகுதி சிந்தியாவின் சொந்த தொகுதியாக இருந்து வந்தது. 2019 தேர்தலில் அவர் பாஜவின் கிருஷ்ணா பால் சிங் யாதவ்விடம் தோல்வி அடைந்ததால், மாநிலங்களவை எம்பியாக்கப்பட்டு அமைச்சர் பதவி தரப்பட்டது. மற்றொரு மாநிலங்களவை எம்பியான பூபேந்தர் யாதவ் ராஜஸ்தானின் அல்வார் தொகுதியிலும், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அருணாச்சல் மேற்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சமீபத்தில் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ மகத்தான வெற்றி பெற்றது. ஆனாலும், ஏற்கனவே முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி தரப்படவில்லை. இதனால் தற்போது அவருக்கு மபியின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல, திரிபுரா முன்னாள் முதல்வரான பிப்லாப் குமார் மேற்கு திரிபுரா மக்களவை தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். அசாமின் முன்னாள் முதல்வரான சர்பானந்தா சோனாவாலுக்கு அம்மாநிலத்தின் திப்ரூகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

மொத்தம் 7 தொகுதிகள் கொண்ட தலைநகர் டெல்லியில் பிரவீன் கான்தேல்வால், மனோஜ் திவாரி மற்றும் பன்சூரி சுவராஜ் உள்ளிட்ட 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் பன்சூரி ஸ்வராஜ், மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் ஆவார். முதல் முறையாக இவர் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். கடந்த ஆண்டு மக்களவையில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டேனிஷ் அலிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ரமேஷ் பிதுரிக்கு இம்முறை சீட் தரப்படவில்லை. அவருக்கு பதிலாக தெற்கு டெல்லி தொகுதியில் ராம்விர் சிங் பிதூரி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஆவார்.

இதே போல, மத்திய இணை அமைச்சர்களான மீனாட்சி லேகி, ரமேஷ்வர் தெலி மற்றும் ஜான் பர்லாவுக்கு இம்முறை வாய்ப்பு தரப்படவில்லை. சர்ச்சைக்குரிய எம்பியான பிரக்யா சிங் சாத்விக்கு பதிலாக மபியின் போபாலில் அலோக் சர்மா களமிறக்கப்பட்டுள்ளார். நடிகையும், எம்பியுமான ஹேமா மாலினிக்கு மீண்டும் மதுரா தொகுதி தரப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு முதல் இவர் இத்தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றுள்ளார். மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ராஜஸ்தானின் கோடா தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் பாஜவுடன் எந்த பெரிய கட்சிகளும் கூட்டணி சேர தயாராக இல்லாததால் இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

* அஜய் மிஸ்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு
கடந்த 2021ல் உபியின் லகிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தநிலையில், லகிம்பூர் கேரி தொகுதியில் மீண்டும் அஜய் மிஸ்ரா தெனிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* 16 மாநிலங்களில் 195 வேட்பாளர்கள்.
* பெண்கள் 28 பேர், 50 முதல் 57 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்கள் 47 பேர்.
* 27 பேர் எஸ்சி, 18 பேர் எஸ்டி, 57 பேர் ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர்கள்.

எந்தெந்த மாநிலத்தில்
எத்தனை வேட்பாளர்கள்
உத்தரப்பிரதேசம் 51
மத்தியபிரதேசம் 24
மேற்கு வங்கம் 20
குஜராத் 15
ராஜஸ்தான் 15
கேரளா 12
சட்டீஸ்கர் 11
ஜார்க்கண்ட் 11
அசாம் 11
தெலங்கானா 9
டெல்லி 5
உத்தரகாண்ட் 3
காஷ்மீர் 2
அருணாச்சல் 2
தாத்ரா நாகர் ஹவேலி 1
கோவா 1
திரிபுரா 1
அந்தமான் நிக்கோபர் 1

The post 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி: 34 ஒன்றிய அமைச்சர்கள், 2 மாஜிக்களுக்கும் வாய்ப்பு; ராஜ்நாத்சிங் அமித்ஷாவுக்கும் இடம்; மபி, திரிபுரா முன்னாள் முதல்வர்களுக்கு வாய்ப்பு; 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை; கூட்டணி இழுபறியால் தமிழ்நாடு பட்டியல் வரவில்லை appeared first on Dinakaran.

Tags : PA ,JHA ,PM Modi ,Varanasi ,Rajnatsing ,Amitshah ,Mabi ,Tripura ,prime ministers ,Tamil Nadu ,New Delhi ,Lok Sabha ,BJP ,Amitsha ,Rajnath Singh ,Majis ,Rajnatching ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு,...