×

பெங்களூரு ஓட்டலில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்; ரவா இட்லி சாப்பிட்டு குண்டு வெடிப்பு நிகழ்த்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சிகளை வைத்து என்ஐஏ தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூரு ஓட்டலில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. ரவா இட்லி சாப்பிட்ட பின் சர்வ சாதாரணமாக மர்ம நபர் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு ஒயிட் பீல்ட் அடுத்த குந்தலஹல்லி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நேற்று 10 வினாடிகள் இடைவெளியில் 2 குண்டு வெடித்தது. இந்த சத்தம் கேட்டதும் ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். ஓட்டல் நிர்வாக இயக்குநர் திவ்யா கொடுத்த புகாரின் பேரில் ஒயிட் பீல்ட் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

காயமடைந்த பாலகிருஷ்ணன் (67), நாசி (30), மோகன் (41), சீனிவாஸ் (47), நவ்யா (25), மூமி (30), சுவார்ணாம்பா (45), தீபான்சு (25) மற்றும் பாரூக் (19) ஆகியோர் 2 தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் தகவலறிந்து தடயவியல் நிபுணர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். இதில் டைமர் பாம் மூலம் குண்டு வைத்திருந்ததை உறுதி செய்தனர். சம்பவ இடத்தில் டைமர், பேட்டரி, வயர், நெட், போர்டுகளை கைப்பற்றினர்.

போலீசார் வழக்கு பதிந்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 25 முதல் 30 வயதான இளைஞர் ஒருவர் தோளில் பையுடன் வருகிறார். உணவு சாப்பிடுவதற்காக ஒரு கவுன்டருக்கு சென்று பணம் கொடுத்து டோக்கன் வாங்குகிறார். பின்னர் ரவா இட்லி வாங்கி சாப்பிட்ட பின், கை கழுவும் இடத்தில் தோளில் மாட்டியிருந்த பையை வைத்து விட்டு செல்வது பதிவாகி இருந்தது. அவர் வெளியில் சென்ற சில நிமிடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஒருவரை நள்ளிரவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஒன்றிய அரசின் என்ஐஏ, உளவுத்துறை, என்எஸ்ஜி ஆகிய விசாரணை பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை பெங்களூருக்கு வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக தீவிரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

தமிழ்நாட்டின் கோவை மாநகர் மற்றும் கர்நாடக மாநிலம், மங்களூர் மாநகரில் கடந்த 2022 நவம்பர் 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் என்ன மாதிரியான ரசாயன பொருட்கள் பயன்படுத்தபட்டதோ, அதே பொருட்கள் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வெடிப்பில் பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்துள்ளனர். மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி ஷாரிக்கிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post பெங்களூரு ஓட்டலில் அடுத்தடுத்து நடந்த சம்பவம்; ரவா இட்லி சாப்பிட்டு குண்டு வெடிப்பு நிகழ்த்திய மர்ம நபர்: சிசிடிவி காட்சிகளை வைத்து என்ஐஏ தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bangalore ,NIA ,Bengaluru ,Rava Idli ,rava ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...