சிறப்பு செய்தி
வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, ₹67 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புகளில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பும் ஒன்றாகும். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சந்திப்பை கடந்து செல்கின்றன. இந்நிலையில், இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ₹98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த சட்ட பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அரசாணை வெளியிட்டது. இதற்காக, ₹195 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதில், மேம்பால கட்டுமான பணிகளுக்கு ₹67.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில எடுப்பு பணிகளுக்கு ₹113.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலமானது வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 900 மீ., நீளத்துக்கு கட்டப்படவுள்ளது. இந்த மேம்பாலம் பாம்குரோவ் ஓட்டல் முன்பாக தொடங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்கப்படவுள்ளது. வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக இது அமைய உள்ளது.
குறிப்பாக வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் நேரடியாக உத்தமர் காந்தி சாலைக்கு சென்று சேரும் வகையில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு, 8014 ச.மீ., அரசு நிலம் மற்றும் 2,883 ச.மீ., தனியார் நிலம் தேவை என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, மாநகராட்சிக்கு சொந்தமான இடம், சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடம் மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்படவுள்ளது.
மேலும், இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் தனியார் நிலத்தின் பரப்பளவை குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையில் உள்ள 37 தனியார் சொத்துகளை கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு சார்பில் 7 இடங்களில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதற்காக கடந்த மாதம் 26ம் தேதி நிலஎடுப்பு அலுவர்கள் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. தற்போது மேம்பாலம் அமைக்க இடம் ஓரளவு இறுதி செய்யப்பட்டதால் சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டால் அடுத்த ஒரிரு வருடங்களில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
n இந்த புதிய மேம்பாலமானது வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 900 மீ., நீளத்துக்கு கட்டப்படவுள்ளது.
n பாம்குரோவ் ஓட்டல் முன்பாக தொடங்கி, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முடிவடையும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
n வடபழனி, கோயம்பேடு மேம்பாலம் போன்று நான்கு வழிகள் கொண்ட மேம்பாலமாக இது அமைய உள்ளது.
The post வள்ளுவர் கோட்டத்தில் ₹67 கோடியில் மேம்பாலம் டெண்டர் கோரியது மாநகராட்சி: 37 தனியார் நிலம், 7 அரசு நிலத்தில் அமைகிறது appeared first on Dinakaran.