×

மிக்ஜாம் புயல் நிவாரணம்: விடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டது; இன்ப அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 நேற்று முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் ரேஷன் கார்டுகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை மாவட்டம் முழுவதும், மற்ற 3 மாவட்டங்களில் மழை பாதித்த தாலுகாக்களில் மட்டும் ரூ.6 ஆயிரம் டிசம்பர் 17ம் தேதி முதல் வழங்கப்பட்டது.

இந்த 4 மாவட்டங்களில் சர்க்கரை கார்டு வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் சிலர் அரசு அறிவித்த ரூ.6 ஆயிரம் பணத்தை பெற முடியவில்லை. இதனால், அவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று தாங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தோம். எங்களுக்கும் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நிவாரண தொகை கிடைக்காதவர்கள் தங்கள் வீடுகளில் மழையால் சேதம் அடைந்த பொருட்கள் குறித்த விவரங்களை ரேஷன் கடைகளில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, வங்கி கணக்கு எண்ணையும் அளிக்க வேண்டும். அதிகாரிகள் வீடுகளுக்கு வந்து விசாரித்து ரூ.6 ஆயிரம் நிவாரண தொகையை வங்கி கணக்கில் செலுத்துவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் டிசம்பர் 17ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தில், வார்டு எண் – மண்டலம் – தெரு பெயர், குடும்ப தலைவர் பெயர், கைபேசி எண், ஆதார் எண், வீட்டு முகவரி, குடும்ப அட்டை எண், வங்கி கணக்கு விவரம், பாதிப்பின் விவரம் என 11 கேள்விகள் கேட்கப்பட்டது. இதை நிரப்பி, குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி கையொப்பம் போட்டு ரேஷன் கடைகளிலேயே வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நிவாரணம் கோரி 5.67 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று கடந்த சில வாரங்களாக ஆய்வு வந்தனர்.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணம் கிடைக்காமல் விடுபட்டவர்களுக்கு ரூ.6,000 நேற்று (1ம் தேதி) முதல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் கிடைக்காதவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான நேற்று அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மிக்ஜாம் புயல் மற்றும் மழை பாதிப்பால் தமிழக அரசு 2வது கட்டமாக நேற்று முதல் சுமார் 5 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த டிசம்பரில் வெள்ள நிவாரணத்தொகை கிடைக்காதவர்களுக்கு நேற்று தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையாக தலா ரூ.6 ஆயிரம் திடீரென வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தது இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post மிக்ஜாம் புயல் நிவாரணம்: விடுபட்டவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்பட்டது; இன்ப அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Migjam storm relief ,CHENNAI ,Migjam storm ,Mikjam storm ,Kanchipuram ,Chengalpattu ,Tiruvallur ,Mikjam cyclone ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...