×

சிவில், கிரிமினல் வழக்குகளில் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அரசியல் சாசன நீதிமன்றங்களில் சிவில் மற்றும் கிரிமினல் (குற்றம்) வழக்குகளில் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை தானாக நீங்கி காலாவதி ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏசியன் ரீசர்பேசிங் ஆப் ரோடு ஏஜென்சி என்ற நிறுவனம் தொடர்பான வழக்கில் கடந்த 2018ம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் விசாரணைக்கு இடைக்கால உத்தரவு உயர் நீதிமன்றம் அல்லது மற்ற நீதிமன்றங்கள் விதிக்கும்போது அது ஆறு மாதத்துக்குள் தானாகவே காலாவதி ஆகிவிடும். குறிப்பாக இடைக்கால தடை நீட்டிக்கப்படுவதற்கான உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் கூட விசாரணை என்பது மீண்டும் தொடங்கும் என தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், \\”சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் வழங்கப்படும் இடைக்கால உத்தரவு என்பது ஆறு மாதம் மட்டுமே என்பது செல்லத்தக்கதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இந்த வழக்கு முதலாவதாக மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ஒத்தி வைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் அபாய்.எஸ்.ஓஹா, ஜே.பி.பரிதிவாலா, பங்கஜ் மித்தல் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பில், \”இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஏசியன் ரீசர்பேசிங் ஆப் ரோடு ஏஜென்சி என்ற நிறுவனம் தொடர்பான வழக்கின் தீர்ப்போடு, அதாவது கால அளவை நிர்ணயம் செய்தவையோடு நாங்கள் ஒத்துபோக முடியாது.
குறிப்பாக அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் நீதிமன்றங்கள் வழக்குகளை தீர்ப்பதற்கு காலவரையறை செய்ய கூடாது. ஏனெனில் அடிமட்டப் பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு மட்டுமே தெரியும்.

காலவரையறை என்ற உத்தரவுகள் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அது தானாக காலாவதி ஆகும் நிலையில் கண்டிப்பாக இருக்க கூடாது. அதேபோன்று அரசியல் சாசன நீதிமன்றங்கள் வழக்குகளை தீர்ப்பதற்கு காலவரையறை என்ற காரணங்களை சொல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக உயர் நீதிமன்றம் உள்பட ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் வடிவம், தன்மை மற்றும் சாராம்சங்கள் அனைத்தும் முழுவதுமாக வேறுபட்டதாக இருக்கும். எனவே சில வழக்குகளுக்கான முன்னுரிமையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடமே விட்டு விடுவதும், அவர்களே அந்த விவகாரத்தை இறுதி நிர்ணயம் செய்வதும் தான் சரியான ஒன்றாக அமையும். அதனால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை தானாக நீங்கி காலாவதி ஆகாது என தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

The post சிவில், கிரிமினல் வழக்குகளில் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை தானாக நீங்காது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Asian Resurfacing of Road Agency ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு