×

பீகாரில் பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

பாட்னா: பீகாரில் கட்சி தாவிய பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் ஒருசில கட்சியினர் தற்போது ஆளும் பாஜவுக்கு தாவி வருகின்றனர். மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வேண்டும் என்று குரலெழுப்பி வந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜவுடன் கைக்கோர்த்து முதல்வராக பதவி ஏற்றார்.

நிதிஷ் அரசு மீது கடந்த 12ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிதிஷ் அரசு வெற்றி பெற்றது. இந்த வாக்கெடுப்பின்போது லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த சேத்தன் ஆனந்த், நீலம் தேவி மற்றும் பிரகலாத் யாதவ் ஆகியோர் ஆளும் ஜேடியு – பாஜ கூட்டணி உறுப்பினர்களுடன் சென்று அமர்ந்தனர். தற்போது மேலும் 2 காங்கிரஸ் மற்றும் 1 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் பாஜவுக்கு தாவி உள்ளனர்.

பீகார் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியதும், காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சவுரவ், முன்னாள் அமைச்சர் முராரி கவுதம் மற்றும் ஆர்ஜேடி கட்சியின் சங்கீதா குமாரி ஆகியோர் பாஜ மாநில தலைவரும், துணைமுதல்வருமான சாம்ராட் சவுத்ரியின் பின்னால் சென்று பாஜ உறுப்பினர்களுடன் அமர்ந்தனர். இதனால் அவர்கள் பாஜவில் இணைவது உறுதியானது. இதனால் பீகார் பேரவையில் காங்கிரசின் பலம் 17ஆக குறைந்துள்ளது.

பேரவை கூட்டத்திலேயே இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜவுக்கு தாவியது குறித்து பீகார் எதிர்க்கட்சி தலைவர் ஷகில் அகமது கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஷகில் அகமது கான், “இருவரும் கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியது பற்றி சபாநாயகரிடம் புகாரளிப்போம். அவர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்துவோம்” என்று கூறினார். இதேபோல் ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் மனோஜ் ஜாவும், “கட்சி தாவிய ஆர்ஜேடி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்துவோம்” என்று தெரிவித்தார்.

The post பீகாரில் பாஜவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள்: தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Patna ,Bihar ,Lok Sabha elections ,Congress MLAs ,Dinakaran ,
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...