×

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

*மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் மாவட்ட அளவிலான தடுப்பு படை கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டத்தின்படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்வித தொழிலிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 14 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அமைக்கப்பட்ட தடுப்பு படை மூலம் நிலையான செயல்பாட்டு நடைமுறை தெரிவித்துள்ளவாறு கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின் போது குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்கப்பட்ட 24 மணி நேரத்தில் குழந்தை நலக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் உரிமையாளரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தொழிலாளர் துறை அலுவலர்கள் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கோழி பண்ணைகள் உள்ளிட்ட பிற இடங்களில் கடந்த ஆண்டில் 1,036 ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் பணிபுரிவது சம்மந்தமாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 மூலம் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் இல்லாத ஊராட்சிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Villupuram ,Collector ,Palani ,Dinakaran ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...