×

துணை மின்நிலையம், கால்நடை பண்ணை கட்டிடம் திறப்பு

ஓசூர்: ஓசூர் அருகே ₹15.97 கோடி மதிப்பில் துணை மின் நிலையம் மற்றும் கால்நடை பண்ணை புதிய கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் சார்பில் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளியில் ₹13.88 கோடி மதிப்பில் 110 கி.வோ. துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ஓசூர் கால்நடை பண்ணையில் ₹2 கோடியே 9 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள இனவிருத்தி காளைகளை தனிமைப்படுத்துதலுக்கான கட்டிடத்தையும் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து பேகேப்பள்ளி துணை மின் நிலையத்தில், மாவட்ட கலெக்டர் சரயு, குத்துவிளக்கேற்றி வைத்து மின் விநியோக பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது: தமிழக முதல்வர் தலைமையிலான அரசு, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பாக விவசாய பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு தடையில்லா மின் விநியோகம் செய்யும் பொருட்டு, புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (நேற்று) ஓசூர் வட்டம் பேகேப்பள்ளியில் ₹13 கோடியே 88 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி. வோ. துணை மின் நிலையத்தை துவக்கி வைத்துள்ளார். இந்த துணை மின் நிலையத்தில் 2ஜ் 16 எம்விஏ திறன் கொண்ட மின்மாற்றியுடன் கூடிய 110 கி.வோ துணை மின்நிலையம் மற்றும் 11 கி.வோ. கோவிந்த அக்ரஹாரம், ராஜேஸ்வரி லே-அவுட், பாகூர், எழில்நகர், மகாலட்சுமி லே-அவுட், நல்லூர் ஆகிய 6 மின்னூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பேகேப்பள்ளியில் 110 கி.வோ துணை மின்நிலையம் நிறுவியதால் பொதுமக்களுக்கு சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மின்நிலையத்தால் 15 ஆயிரத்து 100 வீட்டு உபயோக மின் இணைப்புகள், 1100 தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்புகள், 220 விவசாய மின் இணைப்புகள், 120 வர்த்தகத்திற்கான மின் இணைப்புகள் என மொத்தம் 16ஆயிரத்து 440 மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. அதேபோல், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழக்கை தரத்தை உயர்த்துவதிலும், முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், 2ம் வெண்மைப்புரட்சியை ஏற்படுத்திடவும், பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள உறைவிந்து உற்பத்தி நிலையத்திற்கு தேவையான, உயரின கலப்பின காளைகள் மற்றும் நாட்டின காளைகள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு புதிதாக கொண்டு வந்த காளைகளில் இருந்து, ஏற்கனவே உறைவிந்து உற்பத்தியில் உள்ள பொலி காளைகளுக்கு நோய்தொற்று பாதிக்காத வண்ணம், தனிமையில் வைத்து 30 முதல் 60 நாட்கள் பராமரிக்க வேண்டும். பின்னர், பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லாத காளைகள் உறைவிந்து உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். எனவே, புதிதாக இனவிருத்தி காளைகளை தனிமைப்படுத்துவதற்கான கட்டடம் ₹2 கோடியே 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு, தமிழக முதல்வரால் காணொளிக் காட்சி வாயிலாக தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் சரயு பேசினார்.நிகழ்ச்சியில் சப் கலெக்டர் பிரியங்கா, தமிழ்நாடு மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள் குமார், பழனி, ரமேஷ், உதவி செயற்பொறியாளர் மணிவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் டாக்டர்.இளங்கோ, உதவி இயக்குநர் (பொ) டாக்டர்.இளவரசன், உதவி பொறியாளர் வரலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post துணை மின்நிலையம், கால்நடை பண்ணை கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Substation ,Livestock Farm Building ,Hosur ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Power Generation and Distribution Corporation ,Krishnagiri Power Distribution ,Substation, Cattle Farm Building ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்