×

கணவரின் வீட்டிற்கு முதல் மனைவி சென்றதால் தகராறு 2 பெண் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை: வாலாஜா ரயில் நிலையத்தில் பயங்கரம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவரின் முதல் மனைவி வீட்டிற்கு வந்து சென்றதில் ஏற்பட்ட தகராறில் வாலாஜா ரயில் நிலையத்தில் நேற்று காலை 2 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கீழ்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன்(39). ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது முதல் மனைவி விஜயலட்சுமி(34). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மணியம்பட்டு ரோடு சிப்காட் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் விஜயலட்சுமி வாழ்ந்து வருகிறார். இதையடுத்து அறிவழகன், வெண்ணிலா(28) என்பவரை கடந்த 2017ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள்கள் ஜெனு(6), தாருணிகா(4). இதில் ஜெனு 1ம் வகுப்பும், தாருணிகா எல்கேஜியும் படித்து வந்தனர். முதல் மனைவி விஜயலட்சுமி விவாகரத்து தொடர்பான வழக்கு ராணிப்ேபட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் முதல் மனைவி விஜயலட்சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவழகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அறிவழகன், ‘நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் அதை செய்கிறேன்’ என்று முதல் மனைவியிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெண்ணிலாவுக்கும், கணவர் அறிவழகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வெண்ணிலா, நேற்று காலை தனது 2 மகள்களை அழைத்துக்கொண்டு வாலாஜா ரோடு ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது வந்த எர்ணாகுளத்தில் இருந்து ஹவுரா செல்லும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் முன் வெண்ணிலா தனது 2 மகள்களுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் உடல் சிதறி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெண்ணிலாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆவதால் அவரது இறப்பு குறித்து ராணிப்பேட்டை ஆர்டிஓ மனோன்மணி விசாரணை நடத்தி வருகிறார்.

The post கணவரின் வீட்டிற்கு முதல் மனைவி சென்றதால் தகராறு 2 பெண் குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை: வாலாஜா ரயில் நிலையத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Valaja train station ,Ranipettai ,Valaja railway station ,Ranipet ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...