ராணிப்பேட்டை: தகாத உறவு காதலனுக்கு பதில் அவரது அண்ணனை கூலிப்படையை ஏவி சென்னை பெண் கடத்தினார். அவரை மீட்ட போலீசார் சென்னையைச் சேர்ந்த கள்ளக்காதலி மற்றும் அவரது தோழிகள் 2 பேரை கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த குப்பிடிச்சாத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). திருமணமானவர். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே நிறுவனத்தில் சென்னை பெருங்குடியைச் சேர்ந்த சத்தியவாணி(36)யும் வேலை செய்துள்ளார். இவரது கணவர் இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஒரே இடத்தில் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே 2018 முதல் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. தனக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறி சதீஷ்குமார், அவரிடம் பழகி வந்தாராம். பெற்றோரிடம் பேசி இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார்.
இதனிடையே தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி சத்தியவாணி டார்ச்சர் செய்ததால் தகாத உறவை கைவிட முடிவு செய்து அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய சதீஷ்குமார், மீண்டும் சென்னைக்குச் செல்லவில்லை. சத்தியவாணியின் செல்போன் அழைப்புகள் வந்த போதும் அதனை எடுக்காமல் புறக்கணித்துள்ளார்.
வேலைக்கு செல்லாதது குறித்து வீட்டில் உள்ளவர் கேட்டபோது விடுமுறைஇருப்பதாக கூறி சமாளித்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமாரை காரில் கடத்தி வரும்படி சத்தியவாணி கூலிப்படையை நேற்று முன்தினம் அனுப்பி வைத்துள்ளார். கூலிப்படையினர் வந்தபோது சதீஷ்குமார் வீட்டில் இல்லை. அவரது அண்ணன் ரஞ்சித் குமாரை (35), உங்களின் தம்பி குறித்து பேச வேண்டுமென அழைத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்னைக்கு கடத்தியுள்ளனர். பல மணி நேரம் ஆகியும் ரஞ்சித் குமார் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர்.
அப்போது சத்தியவாணி சதீஷ்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உனது அண்ணனை கூலிப்படை வைத்து நான் தான் கடத்தினேன். நீ சென்னைக்கு வந்தால் மட்டுமே அவரை அனுப்புவேன். இல்லாவிட்டால் விடுவிக்க மாட்டேன் என கூறினாராம். இதுகுறித்த புகாரின்படி வாழைப்பந்தல் போலீசார் சத்தியவாணி செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது அவர் சென்னை பெருங்குடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பெருங்குடி சென்று ரஞ்சித் குமாரை மீட்டு, சத்தியவாணியை கைது செய்தனர்.
அப்போதுதான் சதீஷ்குமார் திருமணத்தை மறைத்து தன்னுடன் தகாத உறவு வைத்திருந்தது அவருக்கு தெரியவந்தது. இதேபோல் சதீஷ்குமாரின் மனைவிக்கும் இதுதெரிந்ததது. இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், சத்தியவாணிக்கு, கூலிப்படை ஏற்பாடு செய்ய உடந்தையாக இருந்தது அவரது தோழிகளான சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த தனலட்சுமி(42), புவனேஸ்வரி (28) என தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சென்னை கிண்டி பகுதியில் இருந்த டாட்டா சுமோவையும் பறிமுதல் செய்தனர். கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் கூலிப்படை ஏவி காதலனுக்கு பதில் அண்ணனை கடத்திய சென்னை பெண்: கள்ளக்காதலி, தோழிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.