×

புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொதுமக்களுக்கு நாள்தோறும் ‘மஞ்சப்பை’: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பிரசுரங்களும் வினியோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் புத்தக திருவிழாவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் நாள்தோறும் மஞ்சப்பை வழங்க நடவடைக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபையில் ‘பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான மக்கள் பிரசாரம்’ செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதார்களை அழைத்து இதுகுறித்து பொதுமக்களிடையே பிரசாரம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘‘மீண்டும் மஞ்சப்பை” என்ற மக்கள் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடையே இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ‘‘மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் கடை கடையாகச் சென்று பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலிருந்தே மஞ்சப் பை அல்லது வேறு ஏதேனும் பையை கொண்டு வந்து பொருட்களை வாங்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பட்டிமன்றம், கவியரங்கம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முக்கிய விருந்தினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் மஞ்சப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை என்கிற திட்டத்தின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் மஞ்சப்பைகளை வழங்கி வருகின்றனர். மேலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை மற்றும் மாற்றுப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களும் வினியோகிக்கப்படுகின்றன. நேற்று இதற்கான நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் மணிமேகலை, உதவி பொறியாளர் சபரிநாதன், லேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொதுமக்களுக்கு நாள்தோறும் ‘மஞ்சப்பை’: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த பிரசுரங்களும் வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur Book Festival ,Tamil Nadu Assembly ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...