×

2 ஆண்டு இழுபறிக்கு பின்னர் லோக்பால் புதிய தலைவர் நியமனம்: குஜராத் கலவர வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதி கன்வீல்கருக்கு பதவி

புதுடெல்லி: பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய சிறப்பு அமைப்பை உருவாக்குவதற்கான சட்டம் கடந்த 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன்படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் ஒன்றிய அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேர்வு குழு அளித்த பரிந்துரையின் பேரில் லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி நியமனம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் லோக்பால் தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதியான பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். மேலும் அவருடன் எட்டு உறுப்பினர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர்.

23.03.2019 முதல் 27.05.2022 வரை சுமார் இரண்டு வருடம், இரண்டு மாதம் நீதிபதி பினாகி சந்திர கோஷ் லோக்பால் அமைப்பின் தலைவராக இருந்தார். ஆனால் அதன் பின்னர் தற்போது வரையில் சிறப்பு அதிகாரம் கொண்ட லோக்பால் அமைப்புக்கு தலைவர் நியமிக்கப்படவில்லை.  லோக்பால் அமைப்பின் அடுத்த தலைவர் நியமனம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்டோரை கொண்ட தேர்வு குழு கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் லோக்பால் அமைப்பின் அடுத்த புதிய தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் மூத்த நீதிபதியாக இருந்த ஏ.எம். கன்வீல்கர் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2002ல் நடைபெற்ற குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடி குற்றமற்றவர் என விடுவித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தவர் இந்த ஏ.எம்.கன்வீல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அமலாக்கத்துறை இன்றைக்கு பல தலைவர்களையும் கைது செய்யும் பண பரிமாற்ற தடை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்ததும் இவர்தான்.

The post 2 ஆண்டு இழுபறிக்கு பின்னர் லோக்பால் புதிய தலைவர் நியமனம்: குஜராத் கலவர வழக்கில் தீர்ப்பளித்த முன்னாள் நீதிபதி கன்வீல்கருக்கு பதவி appeared first on Dinakaran.

Tags : Lokpal ,Kanwheelkar ,Gujarat riots ,New Delhi ,Parliament ,Gujarat ,Dinakaran ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...