×

உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 9 சவரன் பறித்த 2 பேர் சிக்கினர்

ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 9 சவரன் வழிப்பறி செய்த கும்பலில் 2 பேர் சிக்கினர். நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கண்மணி அம்மாள் (85). கடந்த மாதம் மணப்பாக்கம், பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத 2 பேர் அவரை அணுகி, பாட்டி இங்கெல்லாம திருட்டு அதிகம் நடப்பதால் நகைகளை எல்லாம் அணிந்து செல்லக்கூடாது. நகையை கழற்றி கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அக்கறை காட்டுவதுபோல் ஒரு காகிதத்தை டுத்து அதில் வைத்துக்கொள்ளுங்கள் கூறியதும் மூதாட்டியும் நம்பிக்கையுடன் 9 சவரன் தங்க சங்கலி, வளையல் போன்ற நகைகளை கழற்றி அந்த காகிதத்தில் வைத்தார். அந்த ஆசாமிகளும் அதை மடித்து மூதாட்டியின் கைப்பையில் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

வீட்டிற்கு சென்ற மூதாட்டி கைப்பையில் இருந்த பேப்பரை பிரித்து பார்த்தபோது நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, மூதாட்டி ஏமாற்றப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர். இதில், மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்றவர்கள் 6 பேர் கொண்ட கும்பல் என்பதும் இவர்கள் மூதாட்டி கண்மணி அம்மாளின் கவனத்தை திசை திருப்பி நகையை பறித்துக்கொண்டு, கார் மற்றும் பைக்கில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இந்த வழிப்பறியில் தொடர்புடைய ஆந்திர மாநிலம், சித்தூர், வால்மீகி புரத்தை சேர்ந்த கத்தி ரவீந்திர பாபு (46), அன்னமய்யா மாவட்டம், மந்தன பள்ளியை சேர்ந்த பாபர் அலி (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post உதவி செய்வது போல் நடித்து மூதாட்டியிடம் 9 சவரன் பறித்த 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : ALANTHUR ,Manappakkam ,Kanmani Ammal ,Nandambakkam ,Ambedkar ,Manapakkam ,
× RELATED சென்னை அடையாறு, பெருங்குடி,...