×

கட்டுமான பணிகள் ஸ்தம்பிப்பு ஜல்லி, எம் சாண்ட் விலையை குறைக்க வேண்டும்: அரசுக்கு மனு

 

ஈரோடு, பிப். 27: ஜல்லி, எம் சாண்ட் பொருட்கள் கடும் விலையேற்றம் காரணமாக கட்டுமான பணிகள் ஸ்தம்பித்துள்ளதாகவும், விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்டுமான ஒப்பந்ததாரர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மற்றும் சிவில் இன்ஜினியர்கள் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கட்டுமான பணிகள் மேற்கொள்ள முக்கியமான மூலப்பொருட்களான ஜல்லி, எம். சாண்ட், பி. சாண்ட் உள்ளிட்டவைகளின் விலையானது 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கிரஷ்சர் மற்றும் குவாரி உரிமையாளர்களே தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்து உயர்த்தி உள்ளனர்.

இதனால் கடந்தாண்டு ரூ.1700க்கு விற்ற ஜல்லி தற்போது ரூ.3 ஆயிரத்திற்கும், எம். சாண்ட் ரூ.4000க்கும், பி. சாண்ட் ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. இதனால் அரசு கட்டுமானம் மற்றும் சாலை பணிகளை பழைய தொகைக்கு செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் 30 சதவீதம் வரை நஷ்டத்தை சந்திக்க வேண்டி உள்ளது. எனவே ஜல்லி, எம். சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரி 27ம் தேதி மற்றும் 28ம் தேதி உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் சிவில் இன்ஜினியர்கள் சார்பில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நாளொன்றுக்கு ரூ.500 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் பாதிக்கும். இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லையெனில் 29ம் தேதி சேலத்தில் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கட்டுமான பணிகள் ஸ்தம்பிப்பு ஜல்லி, எம் சாண்ட் விலையை குறைக்க வேண்டும்: அரசுக்கு மனு appeared first on Dinakaran.

Tags : Jalli ,Govt. Erode ,Tamil Nadu Highway Contractors Association ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக...