×

மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்து லாரி மீது கார் மோதி பொன்னேரி அதிமுக மாஜி எம்எல்ஏ பலி: மனைவிக்கு தீவிர சிகிச்சை

சென்னை: மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் வந்தபோது, கட்டுப்பாடு இழந்த கார் டிப்பர் லாரி மீது மோதியதில் பொன்னேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மீஞ்சூர் அருகே நாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (63). இவரது மனைவி நிர்மலா (19). இவர்களது ஒரே மகள் ரவீணா. கேளம்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த 1991-96ம் ஆண்டில் ரவிக்குமார் பொன்னேரி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார். அப்போது, திண்டுக்கல் எம்எல்ஏவாக இருந்த நிர்மலாவை காதல் திருமணம் செய்து கொண்டார். திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராகவும் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் இருந்தார். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் மகள் ரவீணாவை கேளம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் விட்டுவிட்டு, மீஞ்சூர்- வண்டலூர் 400 அடி வெளிவட்ட சாலை வழியாக ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை ரவிக்குமார் ஓட்டியுள்ளார்.

நெமிலிச்சேரி சாலை சீமாவரம் சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, ரவிக்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது முன்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் லாரியின் மீது பயங்கர வேகமாக மோதியது. இதில், காரில் இருந்த ரவிக்குமார் மற்றும் நிர்மலா தம்பதி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். தகவலறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு, மீஞ்சூர் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே ரவிக்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரது மனைவி நிர்மலாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், விபத்தில் பலியான ரவிக்குமாரின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு அவரது உடல் சொந்த ஊரான மீஞ்சூரில் உள்ள நாப்பாளையம் கொண்டு வந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ரவிக்குமார் பலியான தகவல் அறிந்ததும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரவிக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

The post மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் விபத்து லாரி மீது கார் மோதி பொன்னேரி அதிமுக மாஜி எம்எல்ஏ பலி: மனைவிக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Meenjoor-Vandalur ,CHENNAI ,Ponneri AIADMK ,Ravikumar ,Meenjur-Vandalur ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்