×

பாரம்பரிய நாட்டு இன மாடுகள் கண்காட்சி சிறந்த மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கல்

ஈரோடு : ஈரோட்டில் நடந்த பாரம்பரிய நாட்டு இன மாடுகள் கண்காட்சியில் சிறந்த மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை பரிசு வழங்கப்பட்டது.ஈரோடு வேப்பம்பாளையத்தில் ஏஈடி பள்ளி வளாகத்தில் நாட்டு மாடுகள் பாதுகாப்புக் குழு மற்றும் ஆதிவனம் அமைப்பு ஆகியன இணைந்து ‘திமில்-24’ என்ற தலைப்பில் பாரம்பரிய நாட்டு இன மாடுகள் கண்காட்சி நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் ரஞ்சித் பங்கேற்று நாட்டு இன மாடுகள் கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் காங்கயம்,புளியகுளம், செவலை, காரி, மயிலை, ஓம்பளச்சேரி குட்டை ரக போன்ற மாடுகள் ஈரோடு, திருப்பூர், காங்கயம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாடுகள் அழைத்து வரப்பட்டன. இதில், பங்கேற்ற மாடுகளுக்கு நிறம்,பல் போடாத காரி கிடாரி,4 பல் வரை உள்ளவை, பூச்சி காளை,4 பல்லுக்கு மேல் உள்ளவை, சிறந்த வண்டி எருது உள்பட 20 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த மாடுகள் தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ. 10 ஆயிரம் வரை பரிசு தொகையும், கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாடுகளுக்கும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார்.நாட்டு மாடு பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹரிணி,ஆதிவனம் அமைப்பின் தலைவர் ரகுநாத்,கீழ் பவானி பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராமசாமி, ஏஇடி பள்ளி தாளாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டு இன மாடுகள் கண்காட்சியில் சிறந்த மாடுகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இவ்விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏ.வுமான செங்கோட்டையன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டு ரக மாடுகளின் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டு மாட்டுப்பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் நல்ல சத்தான மாட்டுப்பால் வழங்கும் வகையில் நாட்டு மாட்டு பால் ஆன ஏ2 பால் ரகங்களை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து அதனை ஆவின் நிறுவனத்தின் உதவியுடன் விற்பனை செய்ய அரசு முன் வர வேண்டும். இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நான் குரல் எழுப்புவேன் என்றார். பரிசளிப்பு விழாவில் மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு,முன்னாள் துணை மேயர் பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாரம்பரிய நாட்டு இன மாடுகள் கண்காட்சி சிறந்த மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Erode ,breed cow ,AED school ,Veppampalayam, ,Adhivanam ,Thimil-24 ,country breed cow ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...